பா.ஜனதா தொண்டர்கள் மீது கை வைத்தால் வீதிக்கு வந்து போராடுவோம் -அண்ணாமலை பேட்டி


பா.ஜனதா தொண்டர்கள் மீது கை வைத்தால் வீதிக்கு வந்து போராடுவோம் -அண்ணாமலை பேட்டி
x

பா.ஜனதா தொண்டர்கள் மீது கை வைத்தால் வீதிக்கு வந்து போராடுவோம் என மதுரையில் அண்ணாமலை கூறினார்.

மதுரை,

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில், பா.ஜனதா மாநகர் மாவட்ட மையக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி மூலம் தொண்டர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி வருகிறார். அதுபோல், தற்போதும் பேசி இருக்கிறார். அவர் வெளியிட்ட காணொலியில், முதல்-அமைச்சர் என்ற வரம்பை மீறி அவர் பேசி இருக்கிறார். குறிப்பாக செந்தில்பாலாஜி கைது, அமலாக்கத்துறை சோதனை போன்ற விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார். செந்தில் பாலாஜி மீதான வழக்கு 2014-ல் தொடரப்பட்ட வழக்கு. அதன் பிறகு சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று, அங்கிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கை அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி நடந்துள்ளது.

தி.மு.க.வின் கருவூலம்

தன் சகோதரியான கனிமொழி எம்.பி. கைது செய்யப்பட்டபோது கூட, முதல்-அமைச்சர் கோபப்பட்டதை பார்க்க முடியவில்லை. ஆனால், செந்தில்பாலாஜியின் கைதுக்கு, முதல்-அமைச்சர் அதிகமாக கோபப்படுகிறார். அப்படி என்றால், தி.மு.க.வின் கருவூலம் செந்தில்பாலாஜிதான் என மக்கள் பேசுவதை உறுதிப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சரின் பேச்சு அமைந்திருக்கிறது.

வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகள் நேர்மையாக வேலையை செய்கிறார்கள். முதல்-அமைச்சரின் பேச்சுதான் நேர்மை இல்லாத வகையில் இருக்கிறது.

சி.பி.ஐ. முன் அனுமதி

சி.பி.ஐ. நடவடிக்கைக்கு 10 எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது 11-வது எதிர்க்கட்சியாக அந்த பட்டியலில் தி.மு.க. இணைந்துள்ளது. சென்னை மெட்ரோவில் ரூ.200 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் தமிழகத்தின் மீது எப்போது வேண்டுமானாலும் சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்கும். அந்த காரணத்திற்காகத்தான் சி.பி.ஐ. நடவடிக்கைக்கு தமிழக அரசின் முன் அனுமதியை பெற வேண்டும் என கூறி இருக்கிறார்கள்.

காணொலி பேச்சின் மூலம், பா.ஜனதா தொண்டர்களை முதல்-அமைச்சர் நேரடியாக மிரட்டி உள்ளார். இதன் தொடர்ச்சியாக குமரி, நெல்லையில் பா.ஜனதா தொண்டர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தி.மு.க.வின் துன்புறுத்தல்கள் தமிழகத்திற்கு புதிதல்ல. ஆனால், இந்த முறை தி.மு.க.வின் கோபம், பா.ஜனதா மீது திரும்பி உள்ளது.

பதில் சவால்

முதல்-அமைச்சரின் சவாலுக்கு, நானும் பதில் சவால் விடுகிறேன். தொண்டர்கள் மீது கை வைத்து பாருங்கள். நாங்களும் வீதிக்கு வந்து போராடுவோம்.

மாநில அரசின் அலுவலகங்களை நோக்கி படையெடுப்போம். நிலைமை கைமீறி போனால் கோட்டையை நோக்கி முன்னேறுவோம். மிரட்டினால் பயப்படமாட்டோம். இன்னும் அதிகமாக குற்றச்சாட்டுகளை முன்வைப்போம். இது பழைய பா.ஜனதா இல்லை. கொடுத்தால் திருப்பி கொடுப்போம். 1 லட்சம் பேரை கைது செய்தாலும் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story