விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய பங்கு -மத்திய மந்திரி பேச்சு


விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய பங்கு -மத்திய மந்திரி பேச்சு
x

விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாக மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர் தெரிவித்தார்.

சென்னை,

விளையாட்டு வீரர்கள் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளுடன், மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்கூர் சென்னையில் நேற்று கலந்துரையாடினர்.

அப்போது அவர் பேசியதாவது:-

'கேலோ' திட்டம் மூலம் இந்தியாவில் பல்வேறு மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. அதேபோல் விளையாட்டு அறிவியலுக்கும் சில மையங்கள் திறக்கப்பட உள்ளது. ஒரு விளையாட்டு வீரர் அறிவியலின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாது. விளையாட்டு வீரர்களின் வெற்றியில் ஏராளமான அறிவியல் இருக்கிறது. இந்த திசையில் மத்திய அரசு பணியாற்றி வருகிறது.

அந்த வகையில் அரியானா மாநிலம் சோனிபெட்டில் ஒரு விளையாட்டு அறிவியல் மையம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற மையங்கள் கர்நாடகாவின் பெங்களூருவிலும், பாட்டியாலாவிலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்தகைய விளையாட்டு அறிவியல் மையங்களை உருவாக்குவதற்காக பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பல்கலைக்கழகங்களின் பங்கு

சுமார் 40 முதல் 50 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் விரைவில் ஒரு கூட்டத்தை நடத்த இருக்கிறோம். விளையாட்டுத்துறையில் பல்கலைக்கழகங்கள் சிறப்பான முறையில் ஈடுபட முடியும். வெற்றிகரமான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் பல்கலைக்கழகங்கள் மிக முக்கிய பங்கை ஆற்ற முடியும்.

நாட்டில் உள்ள 943 தனியார் பல்கலைக்கழகங்களில், ஒவ்வொரு பல்கலைக்கழகமும் 50 முதல் 100 விளையாட்டு வீரர்களை தத்தெடுத்து அவர்களுடைய கல்வி மற்றும் விளையாட்டு திறனை கவனித்து கொள்ளலாம். இவ்வாறு பல்கலைக்கழகங்கள் ஈடுபடும்போது சுமார் 900 முதல் 1,000 உயர்தரமான விளையாட்டு வீரர்கள் கிடைப்பார்கள்.

விளையாட்டுத்துறையின் மேம்பாட்டுக்கு பிரதமர் நரேந்திரமோடி தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story