பவானிசாகரில் குற்ற செயலில் ஈடுபடும் இலங்கை தமிழர்களை வேறு முகாமுக்கு மாற்ற வேண்டும் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவு


பவானிசாகரில்   குற்ற செயலில் ஈடுபடும் இலங்கை தமிழர்களை வேறு முகாமுக்கு மாற்ற வேண்டும்  அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 5 Nov 2022 7:30 PM GMT (Updated: 5 Nov 2022 7:30 PM GMT)

அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவு

ஈரோடு

பவானிசாகரில் குற்ற செயல்களில் ஈடுபடும் இலங்கை தமிழர்களை வேறு முகாமுக்கு மாற்ற வேண்டும் என்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்

பவானிசாகரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் மொத்தம் 1062 குடும்பங்களைச் சேர்ந்த 3700 பேர் வசித்து வருகின்றனர். முகாமில் வசித்து வரும் சிலர் கொலை, கொள்ளை, திருட்டு, சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், இதன் காரணமாக பவானிசாகர் பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் இப்பிரச்சினை சம்பந்தமாக நேற்று பவானிசாகரில் அனைத்து கட்சி நிர்வாகிகள், பொது நல சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பவானிசாகர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாயக் கூட்டத்தில் நடைபெற்றது.

23 தீர்மானங்கள்

கூட்டத்தில் பவானிசாகர் பேரூராட்சி தலைவர் மோகன், அ.தி.மு.க. பேரூர் கழக செயலாளர் செல்வம், காங்கிரஸ் நிர்வாகி நாகமையன், இந்திய கம்யூனிஸ்டு வேலுமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தம்பி ராஜன், பென்சனர் அசோசியேசன் சவரிமுத்து, பொதுப்பணித்துறை தொழிற்சங்க நிர்வாகி காசி விஸ்வநாதன், புங்கார் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், பா.ஜ.க. நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சவுந்தரராஜன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களின் பதிவை நீக்க வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் குடும்பங்களை வேறு முகாமிற்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பரிந்துரை

இது சம்பந்தமான அனைத்து தீர்மானங்களையும் ஈரோடு கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளதாக ஆலோசனைக் கூட்டம் நடத்திய நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுபற்றி சத்தியமங்கலம் தாசில்தார் சங்கர் கணேசிடம் கேட்டபோது, பவானிசாகர் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சம்பந்தமான பிரச்சினைகளை அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டறிந்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தார்.


Next Story