பவானி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


பவானி பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x

பவானி பகுதியில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தாா்.

ஈரோடு

பவானி

பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்ப படிவம் பதிவேற்றும் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பவானி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்துக்கு வந்த மாவட்ட கலெக்டர் அங்கு நடைபெற்று வரும் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப படிவம் பதிவேற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள குப்பைக்கிடங்கு பகுதியில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து அங்கு குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் முறைகள் குறித்து அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டு அறிந்தார். மேலும் தயாரிக்கப்படும் உரங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்தும் அவர் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து உரம் தயாரிப்பு பணிகளை மேம்பாடு செய்ய வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறினார். இதையடுத்து பவானி நகராட்சி பகுதிகளில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்ட பணிகள் நடைபெற்று வரும் இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 40 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் மீதம் உள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார். பின்னர் பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்ற அவர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



Next Story