ஈரோடு மாநகரில் ரூ.752 கோடி செலவில் அடிப்படை வசதிகள்;அமைச்சர் சு.முத்துசாமி தகவல்


ஈரோடு மாநகரில் ரூ.752 கோடி செலவில் அடிப்படை வசதிகள்;அமைச்சர் சு.முத்துசாமி  தகவல்
x

ஈரோடு மாநகரில் ரூ.752 கோடி செலவில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு

ஈரோடு மாநகரில் ரூ.752 கோடி செலவில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

விளையாட்டு அரங்கம்

ஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரிடம் கோரிக்கை விளக்க கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சார்பில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

அப்போது, ஈரோடு கே.கே.நகர் ரெயில்வே நுழைவு பாலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழிப்பாதை அமைக்க வேண்டும். கொடுமணல் அகழாய்வு குறித்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோட்டில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். ஈரோடு நசியனூர் ரோட்டில் விபத்து நடப்பதை தவிர்க்கும் வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் அமைச்சர்களிடம் முன் வைக்கப்பட்டது.

கூடுதல் படுக்கைகள்

கூட்டத்தில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது கூறியதாவது:-

இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் மிகவும் முக்கியமானது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் 2 பஸ் நிலையங்களை புதிதாக அமைக்க நிதி ஒதுக்கி உள்ளார். சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. கனிராவுத்தர்குளத்தில் மற்றொரு பஸ் நிலையம் அமைக்க 13 ஏக்கர் நிலம் வாங்கப்பட உள்ளது. அனைத்து பகுதிகளிலும் சுற்றுவட்ட சாலை மற்றும் ஏற்கனவே உள்ள சாலையை விரிவுபடுத்தும் பணியும் நடக்க உள்ளது.

கொரோனா தொற்று அதிகமாக இருந்த காலத்தில் நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றோம். பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திாியில் 550 படுக்கை வசதிகள் இருந்தன. அங்கு கூடுதலாக 1,700 படுக்கைகளை ஏற்படுத்தினோம். கே.கே.நகரில் உயர்மட்ட பாலம் அமைக்க கூடுதல் இடம் தேவைப்படுகிறது. அதையும் ஆய்வு செய்து உள்ளோம். சி.என்.கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதற்கு சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டு, கவர்னர் மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் முடிந்து அரசு கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டால், 52 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமாகிவிடும்.

ரூ.752 கோடி

அங்கு உள் விளையாட்டு அரங்கம், பெரிய நூலகம், ஐ.ஏ.எஸ்.அகாடமி அமைக்க உள்ளோம். கூட்டத்தில் கூறப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுக்கப்படும். அ.தி.மு.க. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் செய்யப்படாத அடிப்படை வேலைகளை செய்வதற்காக ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் ரூ.752 கோடியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி உள்ளார். தேர்தல் முடிந்ததும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு நடைபெறும். நீங்கள் எங்களுக்கு உறுதுணையாக இருந்து, எங்களது பணிகளை செய்வதற்கு ஊக்கத்தை தர வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

இந்த கூட்டத்தில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., ஒளிரும் ஈரோடு அமைப்பின் நிர்வாகிகள் கணேசன், எம்.சி.ராபின், யு.ஆர்.சி.தேவராஜன், எஸ்கேஎம்.சிவக்குமார், கே.கே.எஸ்.கே.ரபீக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story