தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு  அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேனி

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ். ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரள் முறையீடு இயக்கம் இன்று நடந்தது. அதன்படி, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் (ஐ.சி.டி.எஸ்.) பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல் அடிப்படை ஊதியம் ரூ.11,100 வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

5 ஆண்டுகள் பணி முடித்த குறுமையப் பணியாளர்கள் அனைவரையும் முதன்மை மைய பணியாளர் காலிப் பணியிடங்களில் பணி அமர்த்த வேண்டும். கல்வித் தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு 5 ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளரின் பணிப் பெயரை முன் பருவக் கல்வி ஆசிரியர் என மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுமதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராதிகாதேவி கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில செயலாளர் தேன்மொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் காமாட்சி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் நிர்வாகிகள் கொடுத்தனர்.


Next Story