ராமநாதபுரத்தில் பற்றாக்குறையை சமாளிக்க லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்


ராமநாதபுரத்தில் பற்றாக்குறையை சமாளிக்க லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்
x

ராமநாதபுரத்தில் பற்றாக்குறையை சமாளிக்க லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் பற்றாக்குறையை சமாளிக்க லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.

நகராட்சி கூட்டம்

ராமநாதபுரம் நகராட்சி கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் சந்திரா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு விவாதம் நடைபெற்றது.

குமார்:- ராமநாதபுரத்தில் இருந்த 43 ஊருணிகளில் 20 மாயமாகி விட்டது. மீதி 23 ஊருணிகளில் நகராட்சி நிர்வாகம் எவற்றையெல்லாம் பராமரிக்கிறது. கழிவுநீர், குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

தலைவர்:- 23 ஊருணிகளையும் நகராட்சி பராமரித்து வருகிறது. நமது பராமரிப்பில் இருந்தாலும் அவை வருவாய்துறைக்கு சொந்தமானது. இந்த ஊருணிகளை தூர்வாரி சீரமைத்து மழை நீரை தேக்கி வைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், கழிவுநீர், குப்பை சேராமல் சீரமைக்கவும் அரசிடம் நிதி கேட்டு உள்ளோம். சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பரிந்துரையின்பேரில் முகவை ஊருணியை ரூ.2.56 கோடி செலவில் புனரமைத்து, நடைபாதை, கழிப்பறை, மின்விளக்கு வசதி செய்ய அனுமதி கிடைத்துள்ளது. அதேபோல செம்பொன்குண்டு ஊருணியை புனரமைக்க ரூ.1.20 கோடி நிதி கேட்டு உள்ளோம். இவ்வாறு அனைத்து ஊருணிகளையும் சிறப்பாக பராமரிக்க திட்டம் வகுக்கப்படும்.

லாரிகள் மூலம் குடிநீர்

பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனத்தின் செயல்பாடு சரியில்லை. தொடர்ந்து புகார் வருகிறது. எனவே அந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க நவீன கருவிகள் வாங்கப்படும்.

கடும் கோடைகாலம் மற்றும் குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு 33 வார்டுகளிலும் லாரிகள் மூலம் தினமும் 18 தடவை குடிநீர் வினியோகிக்கப்படும். அக்ரஹாரம் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது. இனி அப்பகுதியில் தண்ணீர் தேங்காது. நகராட்சியின் 4 அரசு பள்ளிகளிலும் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். மின்சாரம் வீணாவதை தடுக்க தெருவிளக்குகளுக்கு தானியங்கி சுவிட்ச் அமைக்கப்படும். நீலகண்டி உள்பட அனைத்து ஊருணிகளிலும் கழிவுநீர் சேராமல் தடுக்கப்படும். பட்டிணம்காத்தான் உரக்கிடங்கு உள்பட 2 இடங்களில் குப்பைகளை தரம்பிரிக்க நுண் செயலாக்க மையம் ரூ.85 லட்சத்தில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story