தஞ்சையில், பயன்தராத பயணிகள் நிழற்குடை


தஞ்சையில், பயன்தராத பயணிகள் நிழற்குடை
x

தஞ்சையில், பயன்தராத பயணிகள் நிழற்குடை

தஞ்சாவூர்

தஞ்சையில் பயணிகள் நிழற்குடை இருந்தும் பயன்தராமல் உள்ளது. அந்த நிழற்குடை சேதம் அடைந்ததால் மக்கள் கொளுத்தும் வெயிலிலேயே கால்கடுக்க காத்து நிற்கின்ற னர்.

பயணிகள் நிழற்குடை

தஞ்சை ரெயில் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் எதிரில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையில் பயணிகள் அமர்வதற்கான வசதியும் இடம் பெற்றுள்ளது. இந்த வழியாகத்தான் தஞ்சை புதிய பஸ் நிலையம், மாரியம்மன்கோவில், சாலியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்கள் செல்கின்றன. மேலும் ரெயிலில் இருந்து இறங்கி வரும் பயணிகள் இந்த வழியாக செல்லும் பஸ்களில் தான் ஏறி சென்று வருகிறார்கள். இந்த பயணிகள் நிழற்குடை பயன்படுத்த முடியாத நிலையில்உள்ளது. காரணம் நிழற்குடையின் மேற்கூரை சேதம் அடைந்து வெட்ட வெளியாக காணப்படுகிறது. இதனால் மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் பயணிகள் நிழற்குடையில் நிற்க முடியாத நிலை தான் காணப்படுகிறது.

பயன்தராத நிலை

இதனால் பயணிகள் அனைவரும் நிழற்குடை இருக்கும் பகுதியில் இருந்து சற்று தொலையில் நின்று பஸ்சில் ஏறி, இறங்கி செல்கிறார்கள். இதனால் பயணிகள் அனைவரும் சாலையோரத்திலேயே காத்து நிற்கின்றனர். அவ்வாறு காத்து நிற்பதால் இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லையோ என்ற அய்யப்பாட்டை ஏற்படுத்துகிறது. ஆனால் இருந்தும் பயன்தராத நிலையில் தான் உள்ளது.

இருப்பினும் பஸ்களும் பயணிகள் நிழற்குடை பகுதியில் நிற்காமல், பயணிகள் நிற்கும் இடத்திலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கிறது. இதனால் சில நேரங்களில் ஒன்றிரண்டு பஸ்கள் வரும் போது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் போது மிகவும் சிரமப்பட்டு தான் சாலையை கடக்கும் நிலை உள்ளது. ஒரு இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது சிறிது நேரத்தில் ரெயில் நிலையம் பகுதியில்உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கடும் அவதி

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தற்போது கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் கொளுத்தி வருகிறது. இந்த கொளுத்தும் வெயிலில் நின்று பயணிகள் பஸ்களில் ஏறிச்செல்கிறார்கள். இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது. எனவே பயணிகள் நிழற்குடையை உடனடியாக சீரமைத்து பயணிகள் அமர்வதற்கான வசதிகளை செய்து தர வேண்டும். மேலும் பயணிகள் நிழற்குடை பகுதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லுமாறு டிரைவர், கண்டக்டர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். அவ்வாறு நின்று சென்றால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்டாது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story