ஆத்தூர் அருகே உப்பளத்தொழிலாளி கொலை வழக்கில் 5 பேருக்கு வலைவீச்சு
ஆத்தூர் அருகே உப்பளத்தொழிலாளி கொலை வழக்கு தொடர்பாக 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே உப்பளத்தொழிலாளி கொலை வழக்கு தொடர்பாக 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் போலீஸ் சரகம் தலைவன்வடலி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 45). உப்பளத்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது சண்முகராஜ் தம்பி சுரேஷ் ஆத்தூர் போலீசாரிடம் கூறியதாவது:-
காப்பாற்ற முயன்றோம்
இறந்த என அண்ணன் சண்முகராஜூவுக்கு முத்துசந்தனம் என்ற மனைவியும், செல்வரேகா, சோனியா தேவி, ராஜஜனனி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். சம்பவத்தன்று நானும், எனது மைத்துனர் சந்தனராஜனும் மோட்டார் சைக்கிளில் சென்றோம். எங்களுக்கு முன்னால் அண்ணன் சண்முகராஜ் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
ஆத்தூர் செல்லும் வழியில் கல்வெட்டி என்ற இடத்திற்கு சென்றபோது அங்கே மறைந்திருந்த சிலர் அரிவாள், கத்தி, வாள் போன்ற ஆயுதங்களுடன் திடீரென்று வழிமறித்து அண்ணனை வெட்டி சாய்த்தனர். தடுக்கப்போன எங்களையும் அரிவாளை காட்டி விரட்டினார்கள். ஆனாலும் எனது அண்ணனை காப்பாற்ற முயற்சி செய்தோம். அதற்குள் அவர்கள் எனது அண்ணனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி விட்டனர். அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இதற்கு 2 நாட்களுக்கு முன்பு சிலர் முன்விரோதத்தில் எனது அண்ணனை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை அறிந்த நானும், மைத்துனரும் அவருக்கு பாதுகாப்பாகவும் சென்றோம். ஆனாலும் கும்பல் எனது அண்ணனை கொலை செய்து விட்டது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் போலீசில் கூறியிருப்பதாக தெரிகிறது.
5 பேருக்கு வலைவீச்சு
இது தொடர்பாக சபரி, கார்த்தி, மூர்த்தி மற்றும் விநாயகம், அவரது தம்பி குரு ஆகியோர் மீது ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.
இந்த சம்பவத்தால் பதற்றம் நிலவி வரும் தலைவன்வடலியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமாதான கூட்டம்
இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் ஆத்தூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், திருச்செந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆவுடையப்பன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். கொலையானவரின் உறவினர்கள், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.
ரூ.6 லட்சம் நிதியுதவி
பேச்சுவார்த்தையின் முடிவில், கொலை செய்யப்பட்ட சண்முகராஜின் மனைவி முத்துசந்தனத்திற்கு ஆவரையூர் பள்ளியில் சத்துணவு கூடத்தில் வேலை வழங்குவது என்றும், அரசு சார்பில் அவரது குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்குவது, அரைகுறையாக கிடக்கும் அந்த வீட்டைக் கட்டிக்கொடுப்பது, சண்முகராஜன் தாயாருக்கு ஓய்வூதியம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து சண்முகராஜ் மனைவியிடம் ரூ.6 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும் அரசு சார்பில் ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்றும், கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன, விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் எனவும் கலெக்டர் உறுதியளித்தார்.