சிறுத்தை பலியான சம்பவத்தில் அ.தி.மு.க. எம்.பி. மீது வழக்குப்பதிய கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை: கால்நடை வளர்ப்போர் போராட்டத்தால் பரபரப்பு


சிறுத்தை பலியான சம்பவத்தில்   அ.தி.மு.க. எம்.பி. மீது வழக்குப்பதிய கோரி   கலெக்டர் அலுவலகம் முற்றுகை:  கால்நடை வளர்ப்போர் போராட்டத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

சிறுத்தை பலியான சம்பவத்தில் தேனி அ.தி.மு.க. எம்.பி. ப.ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிய கோரி தேனி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கால்நடை வளர்ப்போர் போராட்டம் நடத்தினர்.

தேனி

சிறுத்தை சாவு

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த கைலாசநாதர் மலைக்கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கடந்த 27-ந்தேதி சோலார் மின்வேலியில் ஒரு சிறுத்தை சிக்கியது. அதை மீட்க முயன்ற போது உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரனை அந்த சிறுத்தை தாக்கிவிட்டு வனப்பகுதிக்குள் ஓடிவிட்டதாக வனத்துறை தரப்பில் கூறப்பட்டது. மறுநாள் அதே பகுதியில் சோலார் மின்வேலியில் சிக்கி 2 வயது ஆண் சிறுத்தை இறந்து கிடந்தது.

சிறுத்தை இறந்து கிடந்த மின்வேலி அமைந்துள்ள இடம் தேனி அ.தி.மு.க. எம்.பி. ப.ரவீந்திரநாத் உள்பட 3 பேரின் பெயரில் கூட்டுப்பட்டாவாக உள்ளதாக வனத்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. அந்த நிலத்தில் ஆட்டுக்கிடை அமைத்து இருந்த அலெக்ஸ்பாண்டியன் என்ற தொழிலாளியை வனத்துறையினர் முதற்கட்டமாக கைது செய்தனர்.

பின்னர் எம்.பி. ப.ரவீந்திரநாத்தின் விவசாய தோட்ட மேலாளர்களான தங்கவேல், ராஜவேல் ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டுக்குட்டிகளுடன் வந்தனர்

இந்நிலையில் தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க மாநில பொதுச்செயலாளர் சரவணன் தலைமையில், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்்து ஏராளமான கால்நடை வளர்ப்போர் தேனி கலெக்டர் அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி தேவர் சிலை முன்பு இன்று திரண்டனர். அவர்கள் ஒரு மினிவேனில் ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வந்தனர்.

சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் ஆடுமேய்க்கும் தொழிலாளி அலெக்ஸ்பாண்டியனை வனத்துறையினர் கைது செய்ததை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நில உரிமையாளரான தேனி அ.தி.மு.க. எம்.பி. ப.ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இதையடுத்து ஆட்டுக்குட்டிகளை வண்டியில் வைத்து விட்டு, கலெக்டர் அலுவலகத்துக்கு அவர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறை அதிகாரிகளை கண்டித்தும், ப.ரவீந்திரநாத் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். போராட்டக்காரர்கள் சிலர் சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் நிர்வாகிகள் சிலர் கலெக்டர் முரளிதரனை சந்தித்து மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளதாக கூறி அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.


Next Story