முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்13,568 பயனாளிகளுக்கு உயர்தர சிகிச்சைகள்:கலெக்டர் தகவல்


முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில்13,568 பயனாளிகளுக்கு உயர்தர சிகிச்சைகள்:கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 April 2023 6:45 PM GMT (Updated: 2 April 2023 6:46 PM GMT)

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 13 ஆயிரத்து 568 பயனாளிகளுக்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.

தேனி

அறுவை சிகிச்சை

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம், இன்னுயிர் காப்போம்- நம்மை காக்கும் 48', முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு கீழ் உள்ள ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை, 1,090 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகளும், 52 நோய் பரிசோதனைகளும், அதனோடு தொடர்புடைய 11 தொடர் சிகிச்சைகள், 8 உயர்தர அறுவை சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

13,568 பயனாளிகள்

தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, 6 அரசு ஆஸ்பத்திரிகள், 11 தனியார் ஆஸ்பத்திரிகளில் இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன்படி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 9,991 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 43 லட்சம் மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அதுபோல், தனியார் ஆஸ்பத்திரிகளில் இந்த காலகட்டத்தில் 3,577 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 27 லட்சம் மதிப்பில் உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 13 ஆயிரத்து 568 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 70 லட்சம் மதிப்பில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story