கோபி சுற்றுவட்டார பகுதிகளில் எந்திரம் மூலம் நெல் அறுவடை பணி தீவிரம்
கோபி சுற்றுவட்டார பகுதிகளில் எந்திரம் மூலம் நெல் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகறது,
கடத்தூர்
கோபியை அடுத்த கொடிவேரி அணையில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்கால்களில் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் கோபி, அந்தியூர் மற்றும் பவானி பாசன பகுதிகளுக்கு உள்பட்ட 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில், அதிகளவில் ஏ.எஸ்.டி-16 (இட்லி குண்டு), ஏ.டி.டி. சன்ன ரகம் 45, சம்பா, பொன்னி உள்ளிட்ட நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்தனர். தற்போது தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசன பகுதிகளில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் பங்களாபுதூர், டி.என்.பாளையம், பாரியூர், வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் எந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகளை விவசாயிகள் தொடக்கி உள்ளனர். மேலும் தஞ்சாவூர், திருவாருர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராளமான நெல் அறுவடை எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அறுவடை பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. கோபி, கூகலூர், நஞ்சகவுண்டன்பாளையம், புதுவள்ளியாம்பாளையம், புதுக்கரைபுதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில், நெல்லை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.