இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தேசிய கல்விக்கொள்கையை ரத்து செய்யக்கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும், தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பாரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் செல்லையா சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் எழிலன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சண்முகசாமி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் அருமுத்துவள்ளியப்பா, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் நாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் திலகர் நன்றி கூறினார்.