சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்


சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்
x

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

எம்.பி.சி., டி.என்.டி., பி.சி. ஆகிய சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு அமைப்பாளரும், தமிழ்நாடு ஊராளிக்கவுண்டர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவருமான கணேசன் தலைமை தாங்கினார். இதில் சமூகநீதி கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் அய்யாக்கண்ணு, ராமசாமி, முனுசாமி, நாகரத்தினம் உள்ளிட்ட பலர் பேசினர். கூட்டத்தில், தமிழக அரசு நேர்மையான, வெளிப்படையான முறையில் மக்கள் தொகை, கல்வி மற்றும் அரசு பணிகள் பற்றிய தரவுகள் இணைந்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்த தரவுகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சீர்மரபினருக்கு மத்திய அரசு பணிக்கு டி.என்.டி. என்றும், மாநில அரசு பணிக்கு டி.என்.சி. என்றும் இரட்டை சான்றிதழ் முறை இருந்ததை, கடந்த தேர்தல் பரப்புரையின்போது டி.என்.டி. என்று ஒற்றை சான்றிதழாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மாநில பிற்படுத்தப்பட்டோர் நலவாரியத்தை தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும் கூட்டத்தில் ஒரு சமூகத்திற்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டும். ரோகிணி கமிஷன் அறிக்கையை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். 'நீட்' தேர்வு இல்லாமல் மருத்துவக்கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று சமூக நீதி கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு ஊராளிக்கவுண்டர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் முத்துசாமி வரவேற்றார். முடிவில் ஊராளிக்கவுண்டர் இளைஞர் பேரவை ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் நன்றி கூறினார். இதையடுத்து அவர்களில் சிலர் சென்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கொடுத்து, அதனை முதல்-அமைச்சருக்கு அனுப்புமாறு வலியுறுத்தினர்.


Next Story