பிரதமர் மோடி உருவப்படத்தை வைக்க வலியுறுத்தி கோபி பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் நுழைந்த பா.ஜ.க.வினர் 12 பேர் மீது வழக்கு


பிரதமர் மோடி உருவப்படத்தை வைக்க வலியுறுத்தி  கோபி பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள்  நுழைந்த பா.ஜ.க.வினர் 12 பேர் மீது வழக்கு
x

பிரதமர் மோடி உருவப்படத்தை வைக்க வலியுறுத்தி கோபி பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக பா.ஜ.க.வினர் 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஈரோடு

கடத்தூர்

பிரதமர் மோடி உருவப்படத்தை வைக்க வலியுறுத்தி கோபி பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக பா.ஜ.க.வினர் 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மோடி உருவப்படத்துடன்...

கோபி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வி (வயது 56). கடந்த 14-ந் தேதி இவர் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை வீடியோ மற்றும் படம் எடுத்ததாக தெரிகிறது. மேலும் அவர்கள் சார் பதிவாளர் அலுவலகத்தில் பெரியார் படம் உள்ளது. ஏன் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை வைக்கவில்லை? என கேட்டதுடன், பா.ஜ.க.வினர் தாங்கள் கொண்டு வந்த பிரதமர் மோடியின் படத்தை வைக்க வலியுறுத்தியதுடன், அங்கு பிரதமர் மோடியின் உருவப்படத்தை வைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பெரியார் படத்தை உடனே அகற்ற வேண்டும். பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என கூறியதாகவும் தெரிகிறது.

வழக்கு

அதற்கு சார் பதிவாளர் தமிழ்ச்செல்வி , 'இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசிக்கொள்ளுங்கள். பத்திரப்பதிவுக்காக பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். தொந்தரவு செய்யவேண்டாம்,' எனக்கூறி உள்ளார். எனினும் அதை கண்டு கொள்ளாமல் சார் பதிவாளர் தமிழ்ச்செல்வியிடம் பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானம் அடைந்த பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து கோபி போலீசில் சார் பதிவாளர் தமிழ்ச்செல்வி புகார் அளித்தார். அதன்பேரில் பா.ஜ.க.வை சேர்ந்த அரவிந்த், பாலாஜி, புவனா நந்தகுமார் உள்பட 12 பேர் கோபி பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story