அன்புமணி ராமதாஸ் பேட்டி


அன்புமணி ராமதாஸ் பேட்டி
x

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்துக்கும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா திருக்கழிப்பாலைக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றில் கடல்நீர் புகுவதை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அளக்குடி தோணித்துறை பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.

பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரியிடம், கடல்நீர் உட்புகுவதை தடுப்பதற்கு தடுப்பணை கட்ட உள்ள திட்டத்திற்கான வரைபடத்தினை பார்வையிட்டு விவரம் கேட்டறிந்தார்.

ரூ.580 கோடியில் தடுப்பணை

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொள்ளிடம் ஆற்றில் திருக்கழிப்பாலை-அளக்குடி பகுதியில் கடல்நீர் புகுந்துள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தடுப்பணை கட்ட வலியுறுத்தினேன். அதன்படி இப்பகுதியில் ரூ.580 கோடியில் தடுப்பணை கட்ட அரசு பரிசீலித்து வருகிறது.

இதன்மூலம் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கொள்ளிடம் ஆற்றில் 3 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும். 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன் அடையும். இதேபோல, தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் கட்ட வேண்டும்.

நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும். மத்திய நீர்வளத்துறை மந்திரி, கர்நாடக பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக இருப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த 2017-ம் ஆண்டில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட ரூ.430 கோடி அப்போதைய அ.தி.மு.க. அரசால் ஒதுக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனது தொகுதிக்கு அந்த திட்டத்தை மாற்றி விட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

தற்போதைய அரசு, உடனடியாக தடுப்பணை கட்ட வேண்டும். இல்லையென்றால் எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும். கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மயிலாடுதுறை மாவட்ட பா.ம.க. செயலாளர் பழனிச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






Next Story