இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி


இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
x

மாமன்னன்தான் எனது கடைசி படம் என்றும், இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தமிழக அமைச்சராக ராஜ்பவனில் உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் அங்கு பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உங்களிடம் நிறைய எதிர்பார்ப்பு உள்ளது. இளைஞர் நலத்துறைக்கு என்ன செய்ய போகிறீர்கள்?

பதில்:- அனைவரது வாழ்த்துகளுக்கும் நன்றி. இளைஞர் அணிச் செயலாளராக பொறுப்பேற்கும் போதும் விமர்சனங்கள் வந்தன. கண்டிப்பாக இப்போதும் விமர்சனங்கள் வரும். அதையெல்லாம் மீறி எனது செயல்பாடுகள் மூலமாக மட்டுமே விமர்சனங்களுக்கு பதில் சொல்லுவேன்.

சட்டமன்ற உறுப்பினரான போதும் அந்த விமர்சனங்கள் எழுந்தன. என்னால் முடிந்த அளவுக்கு, தலைவரின் ஆணையை ஏற்று இளைஞர் அணி துணை செயலாளராக மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள் அனைவரது ஒத்துழைப்போடும் பொறுப்பை உணர்ந்து சரிவர பணிகளை செய்வேன்.

விளையாட்டு தலைநகரம்

கேள்வி:- பல சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. சீனா போன்ற நாடுகளில் விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?

பதில்:- இப்போதுதான் அலுவலகத்துக்கு சென்று முதல் கையெழுத்தை போட இருக்கிறேன். தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்ற வேண்டும் என்கிற யோசனை என்னிடம் உள்ளது. தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். அதற்கான பணிகளை தொடங்கி அதை முடுக்கி விடுவதற்கான வேலைகள் நடைபெறும்.

வீரர்களுக்கு ஊக்கம்

கேள்வி:- 'உதயநிதி ஸ்டாலின் ஆகிய நான்' என்று நீங்கள் ஏற்றுக்கொண்ட பதவி பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்:- அமைச்சர் பதவியை இன்னொரு கூடுதல் பொறுப்பாகவே பார்க்கிறேன். துறை பற்றி முதலில் அறிந்து, ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகளுடன் கலந்து பேசி, முதல்-அமைச்சரின் ஆலோசனையை பெற்று, அனைத்து அமைச்சர்களின் அறிவுறுத்தலின்படி செயல்படுவேன்.

கேள்வி:- தமிழகத்தில் விளையாட்டு நகரம் அமைக்கப்படுமா?

பதில்:- அதற்கான பணிகளும் நடைபெறும். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் எனது பணிகள் இருக்கும்.

குறை இருந்தால் கூறவும்

கேள்வி:- உங்கள் மீதான எதிர்பார்ப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- அனைவர் மீதும் எதிர்பார்ப்புகள் உள்ளன. வாரிசு அரசியல் என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. விமர்சனங்கள் கூறப்படுவதை நாம் தடுக்க முடியாது. செயல்பாடுகள் மூலமாகத்தான் செய்து காட்ட முடியும். என் மீது குறை இருந்தால் பத்திரிகையாளர்கள் கூறலாம். குறைகளை கூறி விமர்சனம் செய்தாலும் அதற்கேற்றபடி எனது பணிகளை செய்வேன்.

கேள்வி:- வாரிசு அரசியல் விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- இது எனக்கு ஒன்றும் புதிது அல்ல.

கடைசி படம்

கேள்வி:- அமைச்சராகி விட்டீர்கள். இனி தொடர்ந்து நடிப்பீர்களா? நல்ல நடிகரை இழந்துவிட்டோம் என்று கூறலாமா?

பதில்:- கமல்ஹாசன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தேன். அமைச்சராவது தெரிந்ததும் முதலில் அவர்தான் வாழ்த்தினார். அந்த படத்தில் நடிக்கவில்லை. எனது கடைசி படம், மாரி செல்வராஜ் ஆசைப்பட்டதுபோல் மாமன்னன் என்ற படம்தான் எனது கடைசி படம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆங்கில செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'இந்த பதவி எனக்கும், எனது குடும்பத்திற்கு மிகப் பெரிய தருணமா? என்று கேட்டால், அதை நான் அப்படி எடுக்கவில்லை. ஆனால் இதை எனது மிகப்பெரிய பொறுப்பாகவே பார்க்கிறேன். கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் என்பது பொறுப்பான பதவிதான். அந்த பொறுப்புகளை பூர்த்தி செய்ய முயற்சிப்பேன்' என்று பதிலளித்தார்.


Related Tags :
Next Story