மார்பிங் செய்த ஆபாச புகைப்படங்களை அனுப்பி புத்தக கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டல்


மார்பிங் செய்த ஆபாச புகைப்படங்களை அனுப்பி புத்தக கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டல்
x

மார்பிங் செய்த ஆபாச புகைப்படங்களை அனுப்பி புத்தக கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேனி

தேனி:

மதுரை சிக்கந்தர் சாவடி 8-வது தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 35). இவர் தேனியில் புத்தக கடை வைத்துள்ளார். இவர் கொரோனா காலகட்டத்தில் பணத்தேவை காரணமாக, உடனடி கடன் பெறும் வசதி கொண்ட ஒரு செல்போன் செயலி மூலம் ரூ.6 ஆயிரம் கடன் பெற்றார். அதற்காக அந்த செல்போன் செயலியை அவர் தனது செல்போனில் பதிவிறக்கம் செய்தார். அதில் கேட்ட விவரங்களை பூர்த்தி செய்து, தனது ஆதார் அட்டை, பான் கார்டு விவரங்களை சமர்ப்பித்ததுடன், தனது செல்பி புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்தார். அதன்பேரில் அவருக்கு ரூ.6 ஆயிரம் கடன் தொகை கிடைத்தது. சில நாட்களில் அந்த பணத்தை அவர் அதே செயலி மூலம் செலுத்தினார்.

ஆனால், அந்த செயலியை நடத்தி வரும் நிறுவனத்தை சேர்ந்த நபர்கள் அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, இன்னும் கடன் தொகையை செலுத்தவில்லை என்று கூறினர். அப்போது அவர் ஏற்கனவே தனது கடனை செலுத்திவிட்டதாக கூறினார். இதனால், அவருடைய செல்போன் எண்ணுக்கு அவருடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பி வைத்த மர்ம நபர்கள், அதை சமூக வலைத்தளங்களிலும், அவருடைய செல்போனில் சேமித்து வைத்துள்ள அனைத்து செல்போன் எண்களுக்கும் அனுப்பி விடுவோம் என்று மிரட்டினர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் மேலும் ரூ.8,400 செலுத்தினார். ஆனால், அந்த நபர்கள் மீண்டும் பணம் கேட்டதோடு, மேலும் சில மார்பிங் புகைப்படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டினர். இதையடுத்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ராஜேஷ்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட செயலி குறித்தும், மிரட்டிய நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story