கோவில்களில் அன்னதானம் மனநிறைவாய் இருக்கிறதா?


கோவில்களில் அன்னதானம் மனநிறைவாய் இருக்கிறதா என்பது குறித்து பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.

விருதுநகர்

ஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவு அளிப்பது நம் கலாசாரத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மேலைநாடுகளில் உணவு வங்கிகள் மூலமும் உறையுள்கள் மூலமும் உணவு இல்லாதவருக்கு உணவு வழங்கப்படுகிறது.

அந்தவகையில், தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் 23-ந்தேதி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அன்னதான திட்டத்தை அப்போதைய முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஆன்றோர்கள், சான்றோர்கள், பக்தர்கள் வரவேற்பை ெபற்று படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 754 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறைந்தது 25 நபர்களுக்கும் அதிகபட்சம் 200 நபர்களுக்குமாக அன்னதானம் வழங்கப்படுகிறது.

நாள் முழுவதும்

ஒரு இலைக்கு ரூ.35 செலவிடப்படுகிறது. தொடர்ந்து 2012-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழக சட்டசபையில் 2021-2022-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையின் போது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்படி காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. தற்போது ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

பெரிய புண்ணியம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் அன்னதான திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? சாப்பிடும் பக்தர்களுக்கு மனநிறைவு கிடைக்கிறதா? என்பது குறித்து பக்தர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

இருக்கன்குடியை சேர்ந்த டாக்டர் மகேஸ்வரி:-

கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது. ஆதரவற்ற முதியவர்களுக்கு ஒரு வேலை நல்ல உணவு கிடைக்கும் வகையில் அன்னதானம் திட்டம் உள்ளது. அதுமட்டுமின்றி பொதுமக்கள் தங்களது பிறந்த நாள், திருமண நாள் ஆகிய நாட்களில் கோவில்களில் அன்னதானம் வழங்குவது ஏழை, எளியவர்களுக்கு விருந்தாக அமைகிறது. இதனால் அவர்கள் பெரும் புண்ணியம் கிடைப்பதாகவே எண்ணுகிறார்கள்.

கொரோனா காலத்திலும் கைகொடுத்த உணவு

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்லூரி மாணவர் அருள்:-

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஆண்டாள் கோவில், வைத்தியநாத சுவாமி கோவில், பெரிய மாரியம்மன் கோவில், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில், வழி விடு முருகன் கோவில் ஆகிய கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. கொரோனா காலகட்டத்திலும் பொது மக்களுக்கும், உணவு இன்றி தவித்தவர்களுக்கும் அன்னதான திட்டத்தின் மூலம் உணவு பார்சல் முறையில் வழங்கப்பட்டது. அன்னதானத்தின் போது வழங்கப்படும் உணவு மிகவும் அருமையாக உள்ளது.

உணவு தயாரிக்கும்முருகன்:- ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோவிலில் தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். மிகவும் சுத்தமாகவும், தரமான முறையில் வழங்கி வருகிறோம். 100 பேர் சாப்பிட்டது போக மீதி இருந்தாலும் மற்ற நபர்களுக்கு வழங்கி வருகிறோம்.

100 பேருக்கு அன்னதானம்

ராஜபாளையத்தைச் சேர்ந்த கருப்பையா:-

பொதுவாக கோவில் என்றாலே அங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் மிகவும் சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட கோவில்களில் நாங்கள் என்றாவது ஒரு நாள் தான் எங்களது பசி ஆறும். ஆனால் தற்போது மாயூரநாத சுவாமி கோவிலில் தினசரி மதிய வேளையில் 100 பேருக்கு அன்னதானம் வழங்குகிறார்கள். இது எங்களை போன்ற நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இந்த கோவிலில் பல மாதங்களாக அன்னதானம் வாங்கி சாப்பிட்டு வருகிறேன். மேலும் இங்கு பக்தர்கள் வழங்கக்கூடிய தர்மங்களை வைத்து மற்ற இரு வேளைகளில் சாப்பிட்டு வருகிறேன். அரசு எங்களை போன்ற மக்களுக்கு தொடர்ந்து அன்னதானத்தை வழங்க வேண்டும்.

தேவதானத்தை சேர்ந்தநச்சாடலிங்கம்:-

தேவதானம் நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோவிலில் அன்றாடம் வழங்கக்கூடிய அன்னதானம் எங்களது பசியை போக்குகிறது. இந்த பகுதிகளில் உள்ள எண்ணற்ற பகுதிகளில் இருந்து பலரும் இங்கு வந்து மதிய அன்னதானத்தை சாப்பிடுகின்றனர். அதோடு கோவிலுக்கு வரும் என்னை போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

தண்ணீர் தருவதில்லை

விருதுநகர் மணிநகரம் கணபதியம்மாள்:-

நான் விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் அன்னதான கூடத்தில் தினசரி மதிய உணவு சாப்பிடுகிறேன். 50 பேர் வரைக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. தினசரி சாம்பார், ரசம், காய்கறி மற்றும் மோர் வழங்கப்படுகிறது. ஆனால் சாப்பிடுபவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதில்லை. இதனால் முதியவர்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் அன்னதான கூடத்தில் மின்விசிறியும் போடப்படுவதில்லை. எனவே மதிய நேரத்தில் முதியவர்கள் சிரமப்படும் நிலை உள்ளது.

அனைத்து கோவில்கள்

சிவகாசி கருப்பசாமி:-

நான் சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவிலில் வழங்கப்படும் மதிய அன்னதானத்தை அருந்துகிறேன். தினசரி 100 பேருக்கு குறையாமல் அன்னதானம் வழங்குகின்றனர். வெள்ளிக்கிழமை பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதான கூடத்திலும் உணவு சாப்பிட வருபவர்களுக்கு அனைத்து வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. எனவே தினசரி 100 பேருக்கு குறையாமல் மதிய உணவுக்கு வந்து விடுகின்றனர்.

சொக்கலிங்கபுரம்பொன்னம்மாள்:-

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை தினமும் சாப்பிடுகிறேன். இலை போட்டு தான் அனைவருக்கும் அன்னதானம் வழங்குகிறார்கள். அன்னதானம் சாப்பிட வரும் அனைவரையும் மரியாதையாக நடத்துகின்றனர். என்னை போல் தினமும் ஏராளமானோர் இங்கு வந்து அன்னதானம் சாப்பிடுகின்றனர். எத்தனை பேர் வந்தாலும் இல்லை என கூறாமல் அன்னதானம் வழங்குகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்.



Next Story