முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் பேசுவதுதான் கள ஆய்வா? - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கேள்வி


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் பேசுவதுதான் கள ஆய்வா? - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கேள்வி
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் பேசுவது தான் கள ஆய்வா? என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

மதுரை


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் பேசுவது தான் கள ஆய்வா? என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

பொதுக்கூட்டம்

அ.தி.மு.க.வின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி, ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா,மதுரை கிழக்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் அருகே ஹார்விப்பட்டியில் நடந்தது. அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்து, கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்து விட்டது. இந்த வெற்றிக்காக பல ஆயிரம் பொய்களை மக்களிடம் தி.மு.க. கூறியுள்ளது. மகளிருக்கு ரூ.1000, சிலிண்டருக்கு ரூ.100 மானியம், கல்வி கடன் ரத்து, மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து, மது ஒழிப்பு என அடுக்கி கொண்டே போகலாம். மக்களை மட்டுமல்ல, அரசு அலுவலர்களையும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவோம் என வாக்குறுதி தந்து ஏமாற்றி விட்டது.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று ஒரு திட்டத்தை கூட கொண்டு வரவில்லை. மு.க.ஸ்டாலின் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு தான் அடிக்கல் நாட்டி இருக்கிறார். ஏன் கீழடியில் தொடங்கி வைத்த கீழடி அகழ் வைப்பகம் கூட எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த திட்டம்தான். மதுரையில் 2 நாட்களாக முதல்-அமைச்சர் கள ஆய்வு நடத்தினார். அப்போது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் திட்டங்கள் குறித்து ஏன் கருத்து கேட்கவில்லை. குறிப்பாக உள்ளாட்சி பிரதிநிதிகளையாவது அழைத்து இருக்கலாம்.

இடைத்தேர்தல்

திருப்பரங்குன்றம் விரிவாக்க பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக ரூ.540 கோடி ஒதுக்கீடு செய்வதாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான ஆய்வு இன்னும் செய்யப்பட வில்லை. மதுரை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் ரூ.1,296 கோடி செலவில் கொண்டு வரப்பட்டது.

தற்போது இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. அதனை முதல்-அமைச்சர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டாரா என தெரியவில்லை. மதுரையில் டைடல் பார்க்குக்கு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதா. மெட்ரோ ரெயில் வழித்தடம் இறுதி செய்யப்பட்டுள்ளதா? என முதல்-அமைச்சர் கள ஆய்வு செய்தாரா?

மதுரைக்கு புதிய திட்டத்திற்கு அறிவிப்பு கொடுத்திருந்தால் நன்றி தெரிவித்திருப்போம். ஆனால் எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆய்வு வெற்றிகரமானது அல்ல. அது ஒரு சுற்றுப் பயணம்தான். முதல்-அமைச்சர் அதிகாரிகளிடம் பேசுவது தான் கள ஆய்வா?. ஈரோடு இடைத்தேர்தலில் அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் ஒன்று சேர்ந்து தி.மு.க.வை வெற்றி பெற செய்தனர். இது வெற்றி என கருத முடியாது. எடப்பாடி பழனிசாமி சிறந்த ராஜ தந்திரி. இனி அவரது தலைமையை முழுமையாக பார்க்க போகிறீர்கள். தமிழக முழுவதும் தனியார் பஸ்களுக்கு அனுமதி அளிக்க கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ரியல் எஸ்டேட், டாஸ்மாக், சினிமா போன்ற தொழில்களில் ஆதிக்கம் செலுத்துவது போல பஸ் தொழிலிலும் கைவசப்படுத்த போகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் எம்.ஜி.ஆர்.இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story