ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா?
ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
'எத்தனை நாளா செல்கிறேன், கடைசி தேதி வரைக்கும் இருக்காதீங்கனு, ரீடிங் எடுத்த உடனேயே போய் பணத்தை கட்டுங்க, கட்டுங்கன்னு சொன்னா கேட்டாத்தானே! '
கடைசி நாள்
'நம்ம வீட்டுக்கு கரண்ட் பில் கட்ட இன்றைக்குத்தான் கடைசி நாளு, சாயந்திரத்துக்கு உள்ள பணத்தை கட்டலைனா, பியூசை புடுங்கிட்டு போய்விடுவாங்க, பிறகு இருட்டுலதான் கிடக்கணும். புரியாத மனுஷனா இருக்கிறாரே!'
இப்படி பல இல்லங்களில் இல்லத்தரசிகள் கணவன்மார்களை கடிந்துகொள்வதைக் கேட்டு இருக்க முடியும்.
முன்பு எல்லாம் கரண்ட் பில் கட்டுவதாக இருந்தால் மின்சார வாரிய அலுவலகங்களில் உள்ள கவுண்ட்டர்களில் போய்த்தான் பணம் கட்ட வேண்டும். ஆன்லைன் முறை வந்த பிறகு அதிக மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வசதி படைத்தவர்கள் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் பில் வந்தால் ஆன்லைனில் செலுத்த வாரியம் அறிவுறுத்தியது.
வசதி படைத்தவர்கள்
அதன்படி தொழிற்சாலைகள் மற்றும் வசதி படைத்தவர்கள் அதைப்பின்பற்றி வந்தனர்.
இதில் படித்த சிலர் எவ்வளவு ரூபாய் கரண்ட் பில் வந்தாலும் கவுண்ட்டர்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தப்படி ஆன்லைனிலேயே பணத்தைக் கட்டி வந்தனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் கரண்ட் பில் கட்டுபவர்கள் ஆன்லைனில்தான் கட்ட வேண்டும் என்று வாரியம் அறிவுறுத்தியது. இதனையும் பலர் பின்பற்றி வந்தனர்.
இந்தநிலையில் தற்போது ரூ.1,000 பில் வந்தாலே ஆன்லைனில்தான் கட்டவேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.
பழைய முறை
இதுபற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள், மின்சார வாரிய அதிகாரிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
விருதுநகரை சேர்ந்த மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகி கூறுகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியதற்கு காரணமே மின் கட்டணம் வசூலிக்கும் அலுவலர்களை குறைக்கும் எண்ணத்தில் தான். தற்போதைய நிலையில் மின் கட்டணத்திற்கு காசோலை வாங்கலாம் என்ற விதிமுறை இருந்தபோதிலும் அது சிரமத்தை ஏற்படுத்துவதால் அதனையும் தவிர்க்கிறார்கள். எனவே மின்வாரியம் வழக்கம் போல் மின் கட்டணததை வசூல் மையங்களில் வசூலிக்க தேவையான அளவு ஊழியர்களை நியமிக்க வேண்டும். தேவையற்ற முறையில் ஆன்லைன் முறையை வற்புறுத்துவது ஏற்புடையது அல்ல.
மறுதவணை
மின்வாரிய என்ஜினீயர் கூறுகையில், மின்வாரிய நிர்வாகம் ஆன்லைனில் கட்டணத்தை செலுத்த குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்துள்ளது. இந்த தொகையை ரூ.5ஆயிரமாக உயர்த்தினால் ஆன்லைனில் செலுத்துவோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும் ஆன்லைனில் செலுத்தும் போது குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தொகை சென்று சேராத நிலையில் இணைப்பு துண்டிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
சில நேரங்களில் துண்டிப்பை தவிர்ப்பதற்கு இணைப்பு பெற்றவர் மீண்டும் ஒரு தடவை கட்டணம் செலுத்தி அதை அடுத்த தவணையில் ஈடு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆதலால் ஆன்லைனில் கட்டணம் செலுத்த சொல்லும் முறையை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும்.
வீண் அலைச்சலை தவிர்க்கலாம்
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மின்வாரிய அலுவலர் பெத்துராஜ்:- மின்கட்டணம் ரூ. ஆயிரத்திற்கு மேல் இருந்தால் ஆன்லைன் மூலம் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது 70 சதவீதம் வரை டிஜிட்டல் பண பரிமாற்றமே நடைபெறுகிறது. பொதுமக்கள் இப்போது செல்போன்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர்.
ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்துபவர்கள் கண்டிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய தகுதி படைத்தவர்கள் ஆக இருப்பார்கள். எனவே அவர்களுக்கு இது மிகவும் எளிதானது. மேலும் தேவையில்லாமல் பணம் கட்ட வீண் அலைச்சல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
பாதிப்பு இருக்க கூடாது
சிவகாசி குருவையா:-
மின்சார வாரியம் 2 மாதத்துக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்த வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மின் கட்டணம் ரூ.1000-க்கும் அதிகமாக வந்தால் அந்த கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்த தற்போது வழிவகை செய்துள்ளது. போதிய கல்வி அறிவு இல்லாதவர்கள் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதனால் பல வகையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
ஆன்லைன் மூலம் பணம் கட்ட வற்புறுத்தினால் என்னை போன்றவர்கள் வேறு யாரிடமாவது பணம் கொடுத்து ஏமாற அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் அரசு சில முடிவுகளை எடுக்கும் போது அதில் ஏழைகள் மற்றும் போதிய கல்வி அறிவு இல்லாதவர்கள் பாதிக்காத வகையில் முடிவுகளை அறிவிக்க வேண்டும்.
கூடுதல் சுமை
சமூக ஆர்வலர் டேனியல்:- 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மின் நுகர்வேர்களின் எண்ணிக்கையை விட தற்போது 2 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் மின் கட்டணம் செலுத்த அரசு பல்வேறு வழிகளையும், அறிவிப்புகளையும் செய்தாலும் கூட பெரு நகரங்களில் தான் அவைகள் முழுமையாக வெற்றி பெறுகிறது.
சிவகாசி போன்ற தொழில்நகரங்களில் நுகர்வோர்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படுகிறது. சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் உள்ள சிவகாசி மின் அலுவலகத்தில் கடந்த காலங்களில் 12 கவுண்ட்டர்கள் இருந்தது. தற்போது ஒரே ஒரு கவுண்ட்டர் மட்டும் செயல்படுகிறது. மற்ற கவுண்ட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருந்து மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்தநிலையில் கூடுதல் சுமை அளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளது.
மின் வாரிய அதிகாரி பாவநாசம்:- சிவகாசி கோட்டத்தில் உள்ள அனைத்து மின் நிலையங்களிலும் தற்போது ரூ.2 ஆயிரம் வரை உள்ள மின் கட்டணங்கள் ரொக்கமாக பெறப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள ரூ.1000-க்கு மேல் மின்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு இன்னும் நடைமுறைக்கு வர வில்லை. அதற்கான உத்தரவு வந்தவுடன் அதனை நடைமுறைப்படுத்தப்படும்.
வரவேற்பு
ராஜபாளையத்தை சேர்ந்த கல்லூரி அலுவலர் சுகுமார் கூறியதாவது:-
ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மின் கட்டணம் செலுத்த மின் அலுவலகத்திற்கு நேரில் சென்று வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. ஒரு சில நேரங்களில் இணையதளம் சரியாக கிடைக்காது. அந்த நேரத்தில் மின் கட்டணம் செலுத்தாமல் திரும்பி வரக்கூடிய நிலையும் இருந்தது.
எனவே ஆன்லைன் மூலம் மின் கட்டணத்தை எந்த நேரமும் செலுத்தக்கூடிய வசதி இருப்பதால் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.