சென்னை வரும் மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல்


சென்னை வரும் மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 9 Jun 2023 4:59 AM GMT (Updated: 9 Jun 2023 5:48 AM GMT)

சென்னை வரும் மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது. அந்த வகையில் வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தநேரியில் 11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில், மத்திய மந்திரிகள் அமித்ஷா, வி.கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதற்காக 11-ம் தேதி காலை டெல்லியில் இருந்து சென்னை வரும் அமித்ஷா, விமான நிலையத்தில் இருந்து பள்ளிக்கரணை செல்கிறார். அங்கு தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி பாஜக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியை கைப்பற்ற முக்கிய அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் பாஜக நிர்வாகிகளுக்கு அமித்ஷா வழங்குவார் எனத் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 2 நாள் பயணமாக 11-ந் தேதி சென்னை வரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல், பாஜக போட்டியிடும் தொகுதிகளை முன்கூட்டியே இறுதி செய்வது குறித்து பேசப்பட உள்ளதாகவும் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதைபோல முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேரம் ஒதுக்கப்பட்டால் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.



Next Story