பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் திருடிய 3 பெண்களுக்கு சிறை தண்டனை


பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் திருடிய 3 பெண்களுக்கு சிறை தண்டனை
x

கும்பகோணத்தில் பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் திருடிய 3 பெண்களுக்கு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் திருடிய 3 பெண்களுக்கு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

பெண்ணிடம் பணம் திருட்டு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி அங்காடி தெரு பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவருடைய மனைவி ஆதிலட்சுமி (வயது30). இவர் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 18-ந் தேதி நகை வாங்குவதற்காக ரூ.30 ஆயிரத்தை பையில் வைத்து எடுத்துக்கொண்டு நாச்சியார்கோவில் பகுதியில் இருந்து பஸ்சில் ஏறி கும்பகோணம் வந்தார்.

கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் பஸ்சை விட்டு இறங்கிய ஆதிலட்சுமி தனது கைப்பையை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை காணவில்லை. பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசில் ஆதிலட்சுமி புகார் கொடுத்தார்.

போலீசார் விசாரணை

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கும்பகோணம் மேற்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆதிலட்சுமியுடன் பஸ்சில் பயணம் செய்த பெண்கள் 3 பேர் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட பெண்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள குப்பம் ஐரன் காலேஜ் பகுதியை சேர்ந்த பாலன் மனைவி மீனாட்சி (39), லெட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி மனைவி ரேகா (34), இதே பகுதியை சேர்ந்த மகேஷ் மனைவி கோமதி (28) ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆதிலட்சுமியிடம் இருந்து பணத்தை திருடியது தெரியவந்தது.

3 பேருக்கு சிறை தண்டனை

இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கும்பகோணம் குற்றவியல் கோர்ட்டில் நடந்தது வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி பாரதிதாசன் நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது மீனாட்சிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இதேபோல் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ரேகா, கோமதி ஆகியோருக்கு தலா 1 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.


Next Story