சீறிப்பாய்ந்த காளைகளை வீறுகொண்டு அடக்கிய காளையர்கள்


சீறிப்பாய்ந்த காளைகளை வீறுகொண்டு அடக்கிய காளையர்கள்
x

தம்மம்பட்டி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீறுகொண்டு காளையர்கள் அடக்கினர். மாடுகள் முட்டியதில் 13 பேர் காயம் அடைந்தனர்.

சேலம்

தம்மம்பட்டி

ஜல்லிக்கட்டு

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை அடுத்த உலிபுரம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதை ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை வீரர்கள் யாரும் அடக்க முயலவில்லை. பின்னர் ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். ஆனால் சில காளைகள் அவர்களுக்கு போக்கு காட்டி, பிடிபடாமல் தப்பி சென்றன.

13 பேர் காயம்

காளைகள் சில களத்தில் நின்று, வீரர்களை மிரட்டின. ஆனாலும் காளைகளை கண்டு அஞ்சாத காளையர்கள், சீறிப்பாய்ந்த காளைகளை வீறுகொண்டு மடக்கி பிடித்து அடக்கினர். அப்போது பார்வையாளர்கள் விசில் அடித்தும், கைகளை தட்டியும் அவர்களை உற்சாகப்படுத்தினர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் குக்கர், பேன், சில்வர் பாத்திரம், ரொக்கம் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் வீரர்கள் 9 பேரும், காளைகளின் உரிமையாளர்கள் 3 பேரும், பார்வையாளர் ஒருவரும் என 13 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் வேலுமணி தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

பாதுகாப்பு

ஜல்லிக்கட்டில் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, துறையூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், மதுரை, பாலமேடு உள்ளிட்ட 65-க் கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து 350 காளைகள் பங்கேற்றன. 166 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டையொட்டி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story