உளுந்தூர்பேட்டை, சின்னசேலத்தில் ஜமாபந்தி நிறைவு விழா
உளுந்தூர்பேட்டை, சின்ன சேலத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது.
உளுந்தூர்பேட்டை,
நலத்திட்ட உதவி
உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் என்கிற ஜமாபந்தி கடந்த மாதம் 30-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை தாலுகா பகுதிக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 1710 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 65 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 1308 மனுக்கள் நிலுவையில் உள்ளது. 337 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதையடுத்து நேற்று நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளிகள் 198 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் கலந்து கொண்டு 198 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியின்போது தாசில்தார் கோபாலகிருஷ்ணன். தனி தாசில்தார்கள் ராஜூ, சரவணன், நகராட்சி துணைத்தலைவர் வைத்தியநாதன், தலைவர் திருநாவுக்கரசு, விவசாய சங்க நிர்வாகிகள் சீனுவாசன், ஜோதிராமன், ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சின்னசேலம்
சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வழங்கல் அலுவலரும், ஜமாபந்தி அதிகாரியுமான மெர்சி ஏஞ்சலா தலைமை தாங்கினார். தாசில்தார் அனந்தசயனன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராஜலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பிரிவு தனி தாசில்தார் குணசேகரன் வரவேற்றார்.
சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் சுதா மணிகண்டன், பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெயகணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் 157 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜா, மண்டல துணை தாசில்தார் மனோஜ் முனியன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.