கச்சிராயப்பாளையம் அருகேஎன்ஜினீயர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கச்சிராயப்பாளையம் அருகேஎன்ஜினீயர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 March 2023 6:45 PM GMT (Updated: 22 March 2023 6:46 PM GMT)

கச்சிராயப்பாளையம் அருகே என்ஜினீயர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

சாப்ட்வேர் என்ஜினீயர்

கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள பரிகம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். சாப்ட்வேர் என்ஜினீயரான இவருக்கு லோகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். செந்தில்குமார் அமெரிக்காவில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். லோகஸ்வரி தனது குழந்தைகள் படிப்புக்காக கள்ளக்குறிச்சியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். லோகேஸ்வரி தனது குழந்தைகளுடன் பள்ளி விடுமுறை நாட்களில் பரிகத்தில் உள்ள தங்களுக்கு சொந்தமான மாடிவீட்டுக்கு சென்று வருவார்.

நகை கொள்ளை

இந்த நிலையில் செந்தில்குமாருக்கு சொந்தமான வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் நேற்று கிடந்தது. இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி லோகேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் பதறிய லோகேஸ்வரி கள்ளக்குறிச்சியில் இருந்து பரிகம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 8 பவுன் நகைகள், வெள்ளிக் கொலுசுகள், பட்டுப்புடவைகளை காணவில்லை. வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து லோகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, பிரதாப் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதனிடையே கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை போலீசார் சேகரித்தனர்.


Next Story