ஆற்றுக்குள் கார் பாய்ந்து நகைக்கடை உரிமையாளரின் மனைவி பலி
சிதம்பரம் அருகே கார் ஓட்ட பயிற்சி எடுத்தபோது ஆற்றுக்குள் கார் பாய்ந்து பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி பரிதாபமாக இறந்தார்.
சிதம்பரம்
கார் ஓட்ட பயிற்சி
சிதம்பரம் கீழ வீதியை சேர்ந்தவர் மங்கேஷ்குமார்(வயது 52). இவர் அதே பகுதியில் மாலன் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுபாங்கி(46).
இந்த தம்பதிக்கு ஷியாம் என்ற மகனும் சோனா, மோனா என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் சுபாங்கிக்கு கார் ஓட்டுவதற்கு ஆசை ஏற்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் சுபாங்கி, அவரது உறவினர் நாம்தேவ் என்பவருடன் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது சுபாங்கி காரை ஓட்டிக்கொண்டு சிதம்பரத்தில் இருந்து பிச்சாவரம் நோக்கி புறப்பட்டார். பின்னர் அங்கிருந்து மீண்டும் சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
ஆற்றுக்குள் பாய்ந்தது
எட்டுக்கண் மதகுபாலம் அருகே வந்தபோது சுபாங்கியின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிக்கெட்டு ஓடியது. இதில் கண்இமைக்கும் நேரத்தில் அந்த கார், அங்குள்ள உப்பனாற்றில் பாய்ந்தது. இதில் கார் பாய்ந்த வேகத்தில் ஆற்று நீரில் மூழ்க தொடங்கியது. அப்போது காரில் இருந்த நாம்தேவ் போராடி காரின் கதவை திறந்து வெளியே வந்து உயிர் தப்பினார்.
ஆனால் சுபாங்கி வெளியே வர முடியாமல் காருடன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து பற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிதம்பரம் தீயணைப்பு வீரா்கள் சுமார் 2 மணி நேரம் போராடி காருடன் சுபாங்கியின் உடலை மீட்டனர்.
சோகம்
பின்னர், சுபாங்கியின் உடலை அண்ணாமலைநகர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கார் ஓட்டுவதற்கு பயிற்சி எடுத்தபோது, ஆற்றுக்குள் பாய்ந்து நகைக்கடை உரிமையாளரின் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.