குற்றாலம் அருவியில் குளித்த 6 பெண்களின் நகைகள் மாயம்- போலீசார் விசாரணை
குற்றாலம் அருவியில் குளித்த 6 பெண்களின் நகைகள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது குளுமையான சீசன் நிலவுகிறது. வாரவிடுமுறை தினமான நேற்று அதிகாலையில் இருந்தே குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் அருவிகளில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசைகளில் காத்து நின்று குளித்தனர்.
இந்தநிலையில் மெயின் அருவி, ஐந்தருவியில் குளித்த பட்டுக்கோட்டை நாட்டுசாலை பகுதியைச் சேர்ந்த பிரமநாயகம் மனைவி வளர்மதி(வயது58), சற்குணம் மனைவி சரோஜா(70), பிரபாகரன் மனைவி வானஜோதி(60), சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி பரமேஸ்வரி(58), நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த நாராயணன் மனைவி அய்யம்மாள்(31), சிவகங்கை மாவட்டம் கோட்டையூரைச் சேர்ந்த தனலட்சுமி ஆகிய 6 பெண்களின் நகைகள் மாயமானது.
மொத்தம் 32½ பவுன் நகைகள் மாயமானதாக அவர்கள் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருவிகளில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்போது குளித்தால், தண்ணீரில் நகைகள் அறுந்து இழுத்து செல்லப்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போது குறைவான தண்ணீரே அருவிகளில் விழுவதால் கூட்ட நெரிசலில் மர்மநபர்கள் நகைகளை அபேஸ் செய்தனரா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அருவி பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.