வேலை வழங்கக்கோரி கடலூரில் திருநங்கைகள் சாலை மறியல்


வேலை வழங்கக்கோரி  கடலூரில் திருநங்கைகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 Sep 2022 6:45 PM GMT (Updated: 26 Sep 2022 6:46 PM GMT)

வேலை வழங்கக்கோரி கடலூரில் திருநங்கைகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்தனர். இதன்படி திருநங்கைகள் சிலர் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது திடீரென அவர்கள், கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து அவர்கள், கடந்த 10 ஆண்டுகளாக கடலூரில் வசித்து வருகிறோம். ஆனால் நாங்கள் வசிப்பதற்கு இருப்பிடம் இல்லை. படித்த எங்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கவில்லை. ஆகவே எங்களுக்கு வீட்டு மனைப்பட்டா, வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.

கலெக்டரிடம் மனு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை கேட்ட போலீசார், உங்கள் கோரிக்கைகளை கலெக்டரிடம் மனுவாக கொடுங்கள் என்றனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் சென்று மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த மறியலால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story