பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய சங்ககிரி லாரி டிரைவருக்கு 20 ஆண்டு ஜெயில்; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய சங்ககிரி லாரி டிரைவருக்கு 20 ஆண்டு ஜெயில்; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x

பவானி அருகே பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய சங்ககிரி லாரி டிரைவருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஈரோடு


பவானி அருகே பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய சங்ககிரி லாரி டிரைவருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

பிளஸ்-1 மாணவி

சேலம் மாவட்டம் சங்ககிரி எடப்பாடி ரோடு பால்வாய் வீதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் ராஜா (வயது 34). லாரி டிரைவர். திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவரது உறவினர் வீடு ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் உள்ளது. இங்கு கடந்த 17-10-2018 அன்று நடந்த ஒரு விழாவில் கிடா விருந்து நடந்தது. இந்த விருந்தில் பங்கேற்க ராஜா குடும்பத்தினருடன் வந்தார்.

அவர்களின் உறவினரான 16 வயது சிறுமி அங்கு இருந்தார். அவர் ஈரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார். விருந்து நடந்த அன்று அங்கு வந்திருந்த உறவினர் குழந்தைகளை குளிப்பாட்டி விடும்படி மாணவியின் தாயார் தனது மகளிடம் கூறினார். இதனால் அந்த மாணவி விழா நடந்த வீட்டில் இருந்து பக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு குழந்தைகளை அழைத்துச்சென்று குளிப்பாட்டினார். பின்னர் மாணவி குளியல் அறைக்கு சென்றார்.

பலாத்காரம்

அப்போது லாரி டிரைவர் ராஜா அங்கு வந்தார். மாணவி குளியல் அறையில் இருப்பதையும், வீட்டில் வேறு பெரியவர்கள் யாரும் இல்லாததையும் தெரிந்து கொண்ட அவர், குழந்தைகளை நைசாக வெளியே அனுப்பி வைத்தார்.

அந்த சிறுமி, அவருக்கு மிக நெருங்கிய உறவினரின் மகள் என்பதை கூட நினைத்துப்பார்க்காமல், அவரது வாயில் துணியை வைத்து கட்டி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும், இந்த விஷயத்தை யாரிடமாவது கூறினால் லாரியில் கடத்திச்சென்று கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.

இதுபோல் 2 முறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் விருந்து முடிந்து குடும்பத்துடன் அவர் சங்ககிரி சென்றுவிட்டார்.

கர்ப்பம்

கடந்த 4-2-2019 அன்று மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல தாயார் முயன்றார். அப்போது கிடா விருந்தின் போது உறவினரான லாரி டிரைவர் ராஜா பலாத்காரம் செய்த விவரத்தையும், அவர் கொலை மிரட்டல் விடுத்ததையும், இதனால் தான் கர்ப்பமாக இருப்பதையும் தாயாரிடம் எடுத்துக்கூறி மாணவி கண்ணீர் விட்டு அழுதார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் இதுபற்றி பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.

இதை தெரிந்து கொண்ட ராஜா தலைமறைவானார். 3 மாதங்களுக்கு பிறகு அவரை இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

20 ஆண்டு ஜெயில்

மேலும் ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி ஆர்.மாலதி வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில் குற்றம் சாட்டப்பட்ட லாரி டிரைவர் ராஜா மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கிய குற்றத்துக்காக 20 ஆண்டு ஜெயில், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தும் அந்த தீர்ப்பில் நீதிபதி ஆர்.மாலதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜர் ஆனார்.


Next Story