தவுட்டுப்பாளையத்தில் குடோனுக்கு மின்இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய என்ஜினீயருக்கு 3 ஆண்டு ஜெயில்; ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு


தவுட்டுப்பாளையத்தில் குடோனுக்கு மின்இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய என்ஜினீயருக்கு 3 ஆண்டு ஜெயில்; ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு
x

தவுட்டுப்பாளையத்தில் குடோனுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்சார வாரிய இளநிலை பொறியாளருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஈரோடு


தவுட்டுப்பாளையத்தில் குடோனுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்சார வாரிய இளநிலை பொறியாளருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ரூ.10 ஆயிரம் லஞ்சம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஏ.எம்.ஈஸ்வரமூர்த்தி. இவருக்கு சொந்தமான குடோனுக்கு மின்சார இணைப்பு பெறுவதற்காக தவுட்டுப்பாளையம் மின்சாரவாரிய அலுவலகத்தில் கடந்த 2005-ம் ஆண்டு விண்ணப்பித்தார்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த மின்சார வாரிய இளநிலை பொறியாளர் சி.ராமலிங்கம் என்பவர் மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

ஈஸ்வரமூர்த்தி லஞ்சம் கொடுக்க மறுத்து வந்தார். ஆனால் மின் இணைப்பு வழங்க லஞ்சம் கட்டாயமாக வழங்க வேண்டும் என்று இளநிலை பொறியாளர் சி.ராமலிங்கம் வற்புறுத்தினார். இதனால் ஈஸ்வரமூர்த்தி ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். பின்னர் போலீசாரின் அறிவுரையின் பேரில், கடந்த 3-3-2005 அன்று காலை 9.15 மணிக்கு இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் வைத்து ஈஸ்வரமூர்த்தி ரூ.10ஆயிரம் லஞ்சம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இளநிலை பொறியாளர் சி.ராமலிங்கத்தை கையும் களவுமாக பிடித்தனர்.

3 ஆண்டு ஜெயில்

இதுதொடர்பாக அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சரவணன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட மின்சார வாரிய இளநிலை பொறியாளர் ராமலிங்கத்துக்கு 3 ஆண்டு ஜெயில், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் ஒருமாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் இன்னொரு பிரிவிலும் 3 ஆண்டு ஜெயில், ரூ.5 ஆயிரம் அபராதம், அபராதம் செலுத்த தவறினால் ஒரு மாதம் கூடுதல் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு அந்த தீர்ப்பில் கூறி இருந்தார். அதன்படி 3 ஆண்டு ஜெயில், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story