ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரும்
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று புகழேந்தி கூறினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் 72-வது பிறந்தநாள் விழா சேலம் புதிய பஸ்நிலையம் அருகே நேற்று அவரது ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமை தாங்கினார். இதில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி கலந்து கொண்டு 72 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார். இதைத்தொடர்ந்து பெங்களூரு புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. ஒவ்வொரு தகவலையும் நீதிபதிகள் கேட்டு தெரிந்து கொண்டனர். அவர்கள் கேட்ட கேள்விகளை வைத்து பார்க்கும்போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
பொதுவாக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்வார்கள். ஆனால் தற்போது கவர்னர் வெளிநடப்பு செய்துள்ளார். மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். கருப்பு சட்டையை தீண்டாமை ஒழிப்பு போன்றவைக்காக பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகிய தலைவர்கள் பயன்படுத்தினர். ஆனால் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கருப்பு சட்டையை அணிந்து சட்டசபைக்கு சென்றுள்ளார். அவர் தவறு மேல் தொடர்ந்து தவறு செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.