அழகுமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் பூக்குழி இறங்கினர்
அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் நடைபெற்று வந்தது. 6-ம் திருநாள் அன்று மகிழ்வண்ணநாதபுரம், 7-ம் திருநாள் அன்று பெத்தநாடார்பட்டி, பொட்டலூர், 8-ம் திருநாள் அன்று நவநீதகிருஷ்ணபுரம், இலங்காபுரிபட்டணம், 9-ம் திருநாள் அன்று நாகல்குளம் ஆகிய ஊர்களுக்கு அம்மன் சப்பரம் வீதிஉலா சென்று வந்தது. 10-ம் நாள் திருநாள் அன்று இரவு அம்மன் சப்பர வீதி உலாவும், நேற்று அதிகாலையில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். திருவிழாவை முன்னிட்டு மதியம் முதல் இரவு வரை தொடர் அன்னதானம் நடைபெற்றது. மேலும் கோவில் வளாகத்தில் வில்லிசை கச்சேரி, செண்டா மேளம், கனியான் ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எம்.எஸ்.சிவன்பாண்டி தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர். திருவிழாவில் சுற்றுப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.