குப்பைகள் நிறைந்து அசுத்தமாக காட்சி அளிக்கும் கமலாலய குளக்கரை


குப்பைகள் நிறைந்து அசுத்தமாக காட்சி அளிக்கும் கமலாலய குளக்கரை
x

திருவாரூரில் குப்பைகள் நிறைந்து அசுத்தமாக காட்சி அளிக்கும் கமலாலய குளக்கரையை சுத்தப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்


திருவாரூரில் குப்பைகள் நிறைந்து அசுத்தமாக காட்சி அளிக்கும் கமலாலய குளக்கரையை சுத்தப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்்கை விடுத்துள்ளனர்.

கமலாலய குளம்

திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. சைவ தலங்களில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலான இக்கோவில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். பல்வேறு சிறப்புகளை கொண்ட திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு மேற்கு பக்கம் கமலாலய குளம் உள்ளது. இந்த குளத்தை ஆதி தீர்த்தம் என்றும் கூறுவார்கள். கோவில் 5 வேலி, குளம் 5 வேலி என்பதற்கு இணங்க கோவிலை போல் பிரமாண்டமாக உள்ளது இந்த குளம்.

காசியில் 63 தீர்த்தகட்டங்கள் இருப்பதாகவும், ஆனால் கமலாலய குளத்தில் 64 தீர்த்தகட்டங்கள் இருப்பதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதனால் காசி கங்கையை விட அதிக புண்ணியம் தரும் தீர்த்தகுளமாக இந்த குளம் விளங்குகிறது. கமலாலய குளத்தில் நீராடினால் தேவ தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

தா்ப்பணம்

இந்த குளத்துக்கு வற்றாத குளம் என்ற பெயரும் உண்டு. ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு இந்த குளத்தில் மக்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த குளத்தின் தூய்மை கேள்விகுறியாக உள்ளது. இந்த குளத்தில் துணிகள் துவைக்க கூடாது. பிளாஸ்டிக் குப்பைகள், பூக்கள், இலைகள் உள்ளிட்டவற்றை போட்டு அசுத்தப்படுத்த கூடாது என்று விதி உள்ளது. ஆனால் அந்த விதிமுறையை யாரும் பின்பற்றுவதில்லை. மாறாக குப்பைகள் கொட்டுவது, பூக்கள், இலைகள் போன்றவற்றை போட்டு அசுத்தம் செய்து வருகின்றனர்.

குளத்துக்கு புனித நீராட வரும் சிலர் தங்களது பழைய துணிகளை குளத்தின் படித்துறையில் போட்டு செல்கின்றனர். இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் குளத்தின் படித்துறையை திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு செல்கின்றனர்.

குப்பைகள்

சிலர் பாட்டிலை குளத்துக்குள் வீசியும், படித்துறையில் உடைத்து விட்டும் செல்கின்றனர். குளத்தின் படித்துறை அருகே கரை ஒதுங்கும் குப்பைகளை வெளியே எடுத்து போட்டு அங்கேயே கொழுத்தியும் விடுகின்றனர். இதனால் புண்ணிய தீர்த்தத்தின் புனிதம் கேள்விக்குறியாகி உள்ளது. திருவாரூர் கமலாலய குளத்தில் குப்பைகள் அதிகம் சேறுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

நடவடிக்கை

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- கங்கையை விட புண்ணிய தலமாக இந்த குளத்தை கருதுகிறோம். எந்த கோவில் குளத்துக்கும் ஆலயம் என்ற பெயர் கிடையாது. திருவாரூர் கமலாயம் குளத்துக்கு மட்டுமே ஆலயம் என்ற பெயர் உண்டு.புண்ணிய தலமாக பெயர் பெற்ற கோவில் குளம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் நிலையில் உள்ளது. குளத்தின் கரையில் சிறுநீர் கழிப்பது என்று திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.

மதுகுடிப்பவர்கள் மதுப்பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். தை அமாவாசையின் போது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தவர்கள் இலை, பூ, பிளாஸ்டிக் ஆகியவற்றை குளத்தில் போட்டு விட்டு சென்றனர். எனவே குளத்தில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தி இனிவரும் நாட்களில யாரும் குளத்தில் குப்பைகள் கொட்டாத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக குளக்கரையில் அமா்ந்து மது அருந்துபவர்களை போலீசார் கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினா்.


Next Story