காமராஜர் பிறந்தநாள் விழா


காமராஜர் பிறந்தநாள் விழா
x

கரூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டப்பட்டது.

கரூர்

பிறந்தநாள் விழா

முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா தமிழகத்தில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் கரூரில் நேற்று காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நேற்று கரூர் மனோகரா கார்னரில் உள்ள காமராஜரின் திருஉருவ சிலைக்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் எம்.பி.ஜோதிமணி தலைமையில் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க்.சுப்பிரமணியன், வடக்கு மாநகர தலைவர் ஸ்டீபன் பாபு உள்பட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் முத்துகாமாட்சி பாண்டி தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

மாலை அணிவித்து மரியாதை

நாடார் உறவினர் முறை சார்பில் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் காமராஜரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் கேரள மந்திரி நீலகோகிதாஸ் நாடார் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.சுதந்திர போராட்ட வாரிசுதாரர்கள் சங்கம் சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காமராஜர் சேவா சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கூடலரசன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தோகைமலை

தோகைமலை அரசு தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயமணி தலைமை தாங்கி காமராஜர் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவ-மாணவிகளுக்க பேச்சு, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களிலும் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நொய்யல்

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் காமராஜரின் 120-வது பிறந்தநாள்விழா கொண்டாடபட்டது. விழாவிற்கு அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவரும், புகழூர் நகராட்சி 20-வது வார்டு கவுன்சிலருமான சுரேஷ் தலைமை தாங்கி காங்கிரஸ் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் காமராஜரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


Next Story