கருணாநிதி, மு.க.ஸ்டாலின் வழியில் மக்கள் பணியாற்றுவேன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் மக்கள் பணியாற்றுவேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி பிறந்த இல்லத்துக்கு நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றார்.
அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக திருக்குவளைக்கு சென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன், ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் மாவட்ட எல்லையான கொளப்பாட்டில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வருகை பதிவேட்டில் கையெழுத்து
தொடர்ந்து திருக்குவளை இல்லத்துக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்குள்ள கருணாநிதி, அவரது தாயார் அஞ்சுகம் அம்மையார், தந்தை முத்துவேல், மறைந்த மத்திய மந்திரி முரசொலி மாறன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அங்கு கூடியிருந்த தி.மு.க.வினர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கிரிக்கெட் மட்டை, பந்து உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்களை பரிசாக வழங்கினார். பின்னர் அங்குள்ள வருகை பதிவேட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டு தனது வருகையை பதிவு செய்தார்.
அப்போது அமைச்சர்கள் மெய்யநாதன், சக்கரபாணி, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தாட்கோ தலைவர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.
கருணாநிதி-ஸ்டாலின் வழியில் மக்கள் பணி
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விடியலை நோக்கி பிரசாரத்தில், கடந்த ஆட்சியின்போது இதே கலைஞர் இல்லம் முன்பு கைதானேன். தற்போது இங்கு அமைச்சராக வந்துள்ள தருணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மறைந்த முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் மக்கள் பணியாற்றுவேன்.
செல்லும் வழியெல்லாம் நல்ல வரவேற்பு உள்ளது. முதல்-அமைச்சரின் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கிறார்கள். அவைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.