காரைக்குடி அருகே டாஸ்மாக் கடை மீது மண்எண்ணெய் குண்டு வீச்சு மதுபாட்டில்கள்-பணம் நாசம்
டாஸ்மாக் கடை மீது மண்எண்ணெய் குண்டு வீசப்பட்டது. இதில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களும், ரொக்கப்பணமும் எரிந்து நாசமானது.
காரைக்குடி
டாஸ்மாக் கடை மீது மண்எண்ணெய் குண்டு வீசப்பட்டது. இதில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களும், ரொக்கப்பணமும் எரிந்து நாசமானது.
மண்எண்ணெய் குண்டுவீச்சு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் மெயின்ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவில் கடையின் சூப்பர்வைசர் பூமிநாதன் மற்றும் உதவியாளர்கள் 2 பேர், அன்றைய விற்பனையின் கணக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென்று மண்எண்ணெய் பாட்டிலில் தீ வைத்து டாஸ்மாக் கடைக்குள் வீசி விட்டு தப்பி ஓடி விட்டார். இதனால் கடையில் இருந்த அட்டை பெட்டிகள் தீப்பிடித்து எரிய தொடங்கின.
மதுபாட்டில்கள் எரிந்தன
உடனடியாக கடையின் சூப்பர்வைசர் பூமிநாதனும் மற்றும் ஊழியர்களும் பரவிய தீயை போராடி அணைத்தனர். ஆனாலும் ரொக்கம் ரூ.10 ஆயிரத்து 900 மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கடையின் சூப்பர்வைசர் பூமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி உதவி சூப்பிரண்டு ஸ்டாலின் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பள்ளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் வழக்குப்பதிவு செய்து மதுக்கடை மீது மண்எண்ணெய் குண்டு வீசிய ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றார்.