வியாபாரி உள்பட 2 பேரை காரில் கடத்தி ரூ.2½ லட்சம் கேட்டு மிரட்டல்; 3 பேர் கைது


தூத்துக்குடி வியாபாரி உள்பட 2 பேரை காரில் கடத்திச் சென்று ரூ.2½ லட்சம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வியாபாரி உள்பட 2 பேரை காரில் கடத்திச் சென்று ரூ.2½ லட்சம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

காரில் கடத்தல்

தூத்துக்குடி அருகே உள்ள மடத்தூர் திரவியரத்னம் நகரைச் சேர்ந்தவர் குமார் (வயது 49). வியாபாரி. இவரை சிலர் காரில் கடத்தி சென்று ரூ.2½ லட்சம் கேட்டு மிரட்டுவதாக அவரது மனைவி மெல்பா தங்கம் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் கடத்தப்பட்டவரின் செல்போன் எண்ணை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திருவண்ணாமலையில் இருப்பது தெரியவந்தது. மேலும், குமாருடன் அவரது நண்பரான தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த சேகர் என்பவரும் கடத்தப்பட்டது தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், உதவி சூப்பிரண்டு சந்தீஸ் மேற்பார்வையில், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான தனிப்படையினர் திருவண்ணாமலை சென்று கடத்தப்பட்டவர்களை மீட்டு தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர்.

மேலும், இருரையும் கடத்தியது தொடர்பாக ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த வெங்கட்ராவ் மகன் சதீஷ் (37), சிவகங்கை மாவட்டம் செட்டிக்குறிச்சியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் மணி (33), தெலுங்கானா மாநிலம் வெங்கடகிரி பகுதியைச் சேர்ந்த ராம்சந்துரு மகன் வெங்கடேஷ் (33) ஆகிய மூவரையும் கைது செய்தனர். இதுகுறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் கூறியதாவது:-

கடத்தப்பட்ட குமாரும், சேகரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை சென்றபோது தங்களிடம் வேதிப் பொருள் கலந்த விலை உயர்ந்த டார்ச்பீச் எனும் மாந்திரீக பொருள் இருப்பதாக கூறி சதீஷ், மணி, வெங்கடேஷ் ஆகியோரிடம் அறிமுகமாகி உள்ளனர். 3 பேரிடம் இருந்தும் ரூ.48 ஆயிரம் பெற்றுக் கொண்டு குமாரும், சேகரும் ஊர் திரும்பி உள்ளனர்.

இதனால் ஏமாற்றம் அடைந்த 3 பேரும் சேர்ந்து குமார் மற்றும் அவருடைய நண்பர் சேகர் ஆகியோரை கடத்திச் சென்று தங்களிடம் தருவதாக சொன்ன பொருளை தரவில்லை என்றால், உன்னை விட மாட்டோம் என்றும், கடத்தப்பட்ட குமாரின் மனைவியிடம் ரூ.2½ லட்சம் கேட்டு மிரட்டியும் உள்ளனர். கைதான 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story