பொள்ளாச்சியில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை கடத்தல்: 6 தனிப்படைகள் அமைப்பு
பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடிக்க 6 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் யுனிஸ், திவ்யபாரதி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவப்பிரிவில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், இன்று காலை 4 மணியளவில் பிரசவ வார்டுக்குள் புகுந்த 2 மர்மநபர்கள் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தையை தூக்கி சென்றுள்ளனர். தூக்கத்தில் இருந்த விழித்த திவ்யபாரதி அருகில் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து, குழந்தை காணவில்லை என கூச்சலிட்டார்.
திவ்யபாரதியின் சத்தத்தை கேட்ட உறவினர்கள் குழந்தையை தேடினர். இதனையடுத்து குழந்தை காணவில்லை என போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக கோவை எஸ்.பி சத்திய நாராயணன் மருத்துவமனைக்கு நேரில் சென்று யுனிஸ், திவ்யபாரதியிடம் விசாரணை மேற்கொண்டு கண்டிப்பாக குழந்தையை மீட்டு தருவோம் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து குழந்தையை கண்டுபிடிக்க 6 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை, உக்கடம், பொள்ளாச்சி, நகரில் உள்ள 100-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களை போலிசார் ஆய்வு செய்து வருகின்றனர்.