கோடநாடு விவகாரம்: குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி ஓபிஎஸ் தரப்பு போராட்டம் அறிவிப்பு


கோடநாடு விவகாரம்: குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி ஓபிஎஸ் தரப்பு போராட்டம் அறிவிப்பு
x

கோடநாடு விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி ஓபிஎஸ் தரப்பு போராட்டம் அறிவித்துள்ளது.

சென்னை,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கோடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது.

இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும், மாநில அளவில் ஆகஸ்ட் 1-ம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும். கோடநாடு சம்பவம் நிகழ்ந்து 6 ஆண்டுகள் கடந்தும் விசாரணை கிடப்பில் உள்ளது. விரிவான விசாரணை நடத்தினால்தான் குற்றவாளிகள் யார் என்பது தெரியவரும். கோடநாடு வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என வாக்குறுதி கொடுத்தது திமுக. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடம் ஆகியும் கொடநாடு வழக்கில் எந்த நடவடிக்கையும் இல்லை. அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story