தசரா திருவிழாவில் ஆபாச நடனத்திற்கு தடைகோரி வழக்கு: நீதிமன்ற வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் அவமதிப்பு வழக்கு தொடரலாம்
தசரா திருவிழாவில் ஆபாச நடனங்களுக்கு தடைகோரிய வழக்கில் நீதிமன்றத்தின் வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரலாம் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
மதுரை,
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில், கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனங்கள் ஆடுவது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது. ஏற்கனவே கோவில்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனங்கள் இடம்பெறக்கூடாது. இதுதொடர்பாக ஏற்கனவே ஐகோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அவமதிப்பு வழக்கு தொடராம்
இந்த ஆண்டு திருவிழாவிலும் ஆபாச நடனம் ஆடுவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐகோர்ட்டு உத்தரவை முறையாக பின்பற்றி ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் கடந்த வருடம் நடத்தப்பட்டுள்ளது. இதில் எந்த புகாரும் இல்லை என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை முடிவில், கடந்த ஆண்டு இதுகுறித்து ஐகோர்ட்டு விரிவான உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை முறையாக பின்பற்ற வேண்டும். இதில் புதிய உத்தரவுகள் பிறப்பிக்க தேவையில்லை. பழைய உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.