மனைவியை தாக்கிய வக்கீல் கைது


மனைவியை தாக்கிய வக்கீல் கைது
x
தினத்தந்தி 28 Sep 2023 7:00 PM GMT (Updated: 28 Sep 2023 7:01 PM GMT)

முத்துப்பேட்டையில் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடந்ததன் எதிரொலியாக மனைவியை தாக்கிய வக்கீல் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர்

முத்துப்பேட்டையில் போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடந்ததன் எதிரொலியாக மனைவியை தாக்கிய வக்கீல் கைது செய்யப்பட்டார்.

மனைவி மீது தாக்குதல்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் என்கிற உமர் முகமது (வயது43). வக்கீல். இவருடைய மனைவி ஹாஜா ஜெய்னுல் அரபா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். உமர் முகமது- ஹாஜா ஜெய்னுல் அரபா ஆகிய இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று நடந்த தகராறில் ஆத்திரம் அடைந்த உமர் முகமது சைக்கிளுக்கு காற்று அடிக்கும் இரும்பு பம்பால் தனது மனைவி ஹாஜா ஜெய்னுல் அரபாவை தாக்கி, வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு, குழந்தைகளை அழைத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டார்.

போலீஸ் நிலையம் முன்பு தர்ணா

இதில் காயம் அடைந்த ஹாஜா ஜெய்னுல் அரபாவை அவருடைய பெற்றோர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் உமர் முகமது மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதனிடையே அவர் குழந்தைகளை, மனைவி வீட்டு வாசலில் விட்டுவிட்டு அங்கிருந்து மீண்டும் தலைமறைவாகிவிட்டார்.

இந்தநிலையில் வழக்குப்பதிவு செய்தும் போலீசார் உமர் முகமதுவை கைது செய்யாததால் அதிருப்தி அடைந்த அவருடைய மனைவி ஹாஜா ஜெய்னுல் அரபா தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் இரவு முத்துப்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.

கைது

போராட்டத்தின் எதிரொலியாக இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியம், முத்துக்குமார், ஏட்டு சண்முகசுந்தரம் ஆகியோர் மன்னார்குடியில் தலைமறைவாக இருந்த உமர் முகமதுவை நேற்றுமுன்தினம் இரவே கைது செய்து, திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story