சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விடுதலைப் போர் முப்பரிமாண காட்சி செப்டம்பர் 1-ந் தேதிவரை நீட்டிப்பு


சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விடுதலைப் போர் முப்பரிமாண காட்சி செப்டம்பர் 1-ந் தேதிவரை நீட்டிப்பு
x

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும், விடுதலைப் போரில் வீரத்தமிழகம் என்ற முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சி செப்டம்பர் 1-ந் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை கலைவாணர் அரங்கத்தில் 75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட தேசத் தலைவர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில், "விடுதலைப் போரில் வீரத்தமிழகம்" என்ற முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது. அது 15-ந் தேதியன்று அமைச்சர்களால் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.

25-ந் தேதி வரை நடைபெற்று வந்த இந்த முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சியை, பொதுமக்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் அதிக அளவில் பார்வையிடுவதற்கு ஏதுவாக வரும் செப்டம்பர் 1-ந் தேதி (வியாழக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் போர் ஆரம்பம்

200 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்கள், ஆங்கிலேயரின் அடக்குமுறைகள், சுதந்திரத்தின் அருமை ஆகியவற்றை இளம் தலைமுறையினர் இடையே கொண்டு செல்லும் நோக்கில் இந்த முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் இந்தியாவில் விடுதலைக்குப் போராடிய அரும்பெரும் தலைவர்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் கொண்ட மாதிரிகளை வடிவமைத்து, அவர்களின் வீரதீரச் செயல்கள் மற்றும் தியாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

தென்னகத்தில், குறிப்பாக வீரம் விளைந்த நம் தமிழகத்தில்தான் முதல் சுதந்திரப் போர் ஆரம்பமானது. வேலூர் கோட்டையில் நடைபெற்ற சிப்பாய்களின் புரட்சிதான் இந்தியாவில் நடந்த முதல் விடுதலைப் போராகக் கருதப்படுகிறது.

தலைவர்களின் தியாகம்

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை வேலுநாச்சியார், குயிலி, மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை போன்ற வீர மறவர்களின் போராட்டங்களும்,

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதியார், பெரியார், ராஜாஜி, திருப்பூர் குமரன், காமராஜர், காயிதே மில்லத், ஜே.சி. குமரப்பா, பசும்பொன் முத்துராமலிங்கம், கடலூர் அஞ்சலை அம்மாள் போன்ற எண்ணற்ற தலைவர்களின் தியாகங்களும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்திய விடுதலைக்கு வித்திட்ட முத்தாய்ப்பான 3 போராட்டங்களான ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய நிகழ்வுகளும் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

கட்டணமில்லை

இக்கண்காட்சி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை. அனுமதி முற்றிலும் இலவசம். பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இந்த முப்பரிமாண ஒளி-ஒலிக் காட்சியினை பார்வையிட்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story