கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
திருமணம் செய்ய வற்புறுத்தியதால் பெண்ணை கொலை செய்த கள்ளக் காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு பரபரப்பு தீா்ப்பு வழங்கியது.
கள்ளக்காதல்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் எழில் நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 36). இவரது கணவர் கார்த்திக். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு முதல் புவனேஸ்வரி கணவரிடம் இருந்து பிரிந்து தனது மகள் லோகஸ்ரீயுடன் (17) வசித்து வந்தார்.
இந்நிலையில் திருமணமான அதே ஊரை சேர்ந்த குமார் (38) என்பவருக்கும், புவனேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. இதனால் இருவரும் நார்த்தாமலையில் உள்ள குமாரின் கோழிப்பண்ணையில் அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 5.12.2019-ல் இருவரும் கோழிப்பண்ணையில் சந்தித்தனர். அப்போது புவனேஸ்வரி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு குமாரிடம் வற்புறுத்தியுள்ளார்.
கழுத்தை நெரித்து கொலை
ஆனால் குமார் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குமார், புவனேஸ்வரியை தாக்கி, அவரது சேலையால் கழுத்தை இறுக்கி உள்ளார். இதில் அவர் அங்கேயே மயங்கினார். பின் புவனேஸ்வரியின் மகள் லோகஸ்ரீக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உனது தாய் மயக்கமடைந்து கிடக்கிறார். அவரை வந்து அழைத்து செல் என கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து லோகஸ்ரீ சம்பவ இடத்திற்கு வந்து தாயை மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் புவனேஸ்வரி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதன்பின் புவனேஸ்வரியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக லோகஸ்ரீ கூறியுள்ளார். அதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனையில் புவனேஸ்வரி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து புகாரின்பேரில் கீரனூர் போலீசார் குமாரை கைது செய்து புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆயுள் தண்டனை
வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் கொலை செய்த குற்றத்திற்காக குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், கொலையை மறைத்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கினார்.
மேலும் சிறையில் இருக்கும்போது அவருக்கு அங்கு பணி வழங்கி அதில் இருந்து வரும் வருவாயில் 20 சதவீதத்தை இறந்த பெண்ணின் மகளுக்கு வழங்க வேண்டும். மேலும் அபராத தொகையை புவனேஸ்வரி மகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் பரபரப்பு தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.