மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை


மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
x

மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை

விவசாய கூலித்தொழிலாளி

புதுக்கோட்டை மாவட்டம், ராப்பூசல் அருகே விட்டாநிலைப்பட்டியை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி வேளாங்கண்ணி (வயது 45). இவரது மனைவி மதளை அம்மாள் (45). இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையிலும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில் மனைவிக்கு தெரியாமல் வேளாங்கண்ணி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த விவகாரம் தெரியவந்ததும் கணவரிடம் மதளை அம்மாள் தட்டிக்கேட்டு சண்டையிட்டுள்ளார். மேலும் அவ்வப்போது கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

மரண வாக்குமூலம்

இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி 2-வது மனைவியின் வீட்டிற்கு சென்று விட்டு முதல் மனைவியின் வீட்டிற்கு வந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் மதளை அம்மாளை மண்எண்ணெய்யை ஊற்றி வேளாங்கண்ணி தீ வைத்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையில் மரண வாக்குமூலத்தில் தனது கணவர் தான் தன்னை தீ வைத்து எரித்ததாக மாஜிஸ்திரேட்டிடம் மதளை அம்மாள் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேளாங்கண்ணியை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அப்துல்காதர் இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் மனைவியை எரித்து கொன்ற வேளாங்கண்ணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதைத்தொடர்ந்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.


Next Story