மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை-புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு


மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை-புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை

குடும்ப பிரச்சினை

புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 42). இவர் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சகுந்தலா (41). இவர்களுக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்தகராறு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக பிரிந்து இருந்தனர். கணவர் தனியாகவும், மனைவி தனது மகன், மகளுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் உறவினர்கள் பேச்சுவார்த்தையின் மூலம் குடும்ப பிரச்சினை தீர்க்கப்பட்டு கணவன்-மனைவி குழந்தைகளுடன் குடும்பமாக வாழ வழி செய்தனர். சமாதானமடைந்த பின் ஆலங்குளத்தில் உள்ள மனைவி சகுந்தலாவின் வீட்டில் முருகேசன் குடும்பம் நடத்தி வந்தார்.

ஆயுள் தண்டனை

இந்த நிலையில் சமாதானமடைந்து சேர்ந்து வாழ்ந்த போது ஒரு மாத காலத்தில் மனைவி சகுந்தலாவுடன் மீண்டும் முருகேசன் தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த 12-6-2020 அன்று சகுந்தலா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் சகுந்தலா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும், அவரை கணவர் முருகேசன் கொன்றதும் தெரியவந்தது.

முதலில் இயற்கை மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு பின் கொலை வழக்காக பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து முருகேசனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.


Next Story