மனைவியின் கள்ளக்காதலன் அடித்துக்கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மேட்டூர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
மனைவியின் கள்ளக்காதலனை அடித்துக்கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மேட்டூர் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
மேட்டூர்,
கள்ளக்காதல்
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் விராலிகாடு பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 53). தொழிலாளி. இவருடைய மனைவி கலாதேவி. இவர்களது எதிர் வீட்டை சேர்ந்தவர் ரவி (45). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
ரவிக்கும், நாச்சிமுத்து மனைவி கலாதேவிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த நாச்சிமுத்து, 2 பேரையும் கண்டித்துள்ளார். ஆனால் ரவி தொடர்ந்து கலாதேவியுடன் தொடர்பில் இருந்து வந்தார். இது நாச்சிமுத்துவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
ஆயுள் தண்டனை
இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் இரவு நாச்சிமுத்து வீட்டு வாசலில், ரவி தூங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்து ஆத்திரமடைந்த நாச்சிமுத்து, இரும்பு கம்பியால் ரவியை தாக்கி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து நாச்சிமுத்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த கொளத்தூர் போலீசார் நாச்சிமுத்துவை கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கு மேட்டூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் லாரி டிரைவர் ரவியை கொலை செய்ததற்காக நாச்சிமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி குமார் சரவணன் அதிரடியாக தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார் நாச்சிமுத்துவை சிறையில் அடைக்க அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் குழந்தைவேல் ஆஜராகி வாதாடினார்.
முதல் முறையாக தீர்ப்பு
மேட்டூரில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தொடங்கப்பட்டதிலிருந்து இந்த வழக்கில் தான் முதல் முறையாக ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.