இடி, மின்னல் தாக்கி 12 ஆடுகள் பலி


இடி, மின்னல் தாக்கி 12 ஆடுகள் பலி
x

கயத்தாறு அருகே இடி, மின்னல் தாக்கி 12 ஆடுகள் பலியாகின.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே கட்டாலங்குளத்தில் நேற்று பெய்த பலத்த மழையின் போது இடி, மின்னல் தாக்கியதில் 12 ஆடுகள் பலியாகின. அருகில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களும் தப்பி ஓடி உயிர் தப்பினர்.

இடி, மின்னலுடன் மழை

கயத்தாறு அருகே கட்டாலங்குளம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டிவதைத்தது. இந்த நிலையில் நேற்று மதியம் முதல் வானத்தில் வேகமூட்டம் காணப்பட்டது.

நேற்று மாலை 4.30 மணி அளவில் திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது கிராமத்து அருகிலுள்ள வயல் வெளியில், அந்த ஊரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் முத்து, மற்றும் அயோத்தி ராமன் என்பவருடைய மகன் செல்லத்துரை ஆகிய இருவரும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.

திடீரென்று பெய்த மழையால் ஆடுகளை அருகிலுள்ள மலைக்கோவில் மரத்தின் அடியில் நிறுத்திவிட்டு, இருவரும் ஓரமாக நின்றனர்.

12 ஆடுகள் பலி

அப்போது பலத்த சத்தத்துடன் இடி மின்னல் தாக்கியதில் அந்த இடத்திலேயே 12 ஆடுகளும் பலியாகின. மற்ற ஆடுகள் லேசான காயத்துடன் உயிர் தப்பின. முத்து, செல்லத்துரை ஆகிய இருவரும் தப்பி ஓடி உயிர்தப்பினர். இதுகுறித்து கால்நடை மருத்துவ அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து இறந்த ஆடுகளை, அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தார். பலியான ஆடுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என ஆடுகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story