உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் பெரும்பான்மையான இடங்களை தி.மு.க. கைப்பற்றியது


உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் பெரும்பான்மையான இடங்களை தி.மு.க. கைப்பற்றியது
x

உள்ளாட்சி இடைத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை தி.மு.க. கைப்பற்றியது.

சென்னை,

தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 30.4.2022 வரையில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 2, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 20, கிராம ஊராட்சி தலைவர்கள் 40, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 436 ஊரக உள்ளாட்சியில் மொத்தம் 498 காலி பதவி இடங்களுக்கும், மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் 2, நகராட்சி வார்டு உறுப்பினர்கள் 2, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 8 என நகர்ப்புற உள்ளாட்சியில் மொத்தம் 12 காலி பதவி இடங்களுக்கும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 9-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது.

இதில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 4 ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 6 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 292 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்களும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடமும் (தஞ்சை மாநகராட்சி வார்டு எண்-8) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வேட்பு மனுக்களை...

மேலும் தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியின் 26-வது வார்டு உறுப்பினர் பதவியிடத்துக்கான தேர்தல் வழக்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 3 கிராம ஊராட்சி தலைவர்கள், 22 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்களுக்கும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சிவகங்கை மாவட்டம் கானாடுக்காத்தான் பேரூராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவியிடத்துக்கும் வேட்புமனுக்கள் பெறப்படாததால் தேர்தல் நடைபெறவில்லை.

எனவே 2 மாவட்ட ஊராட்சி வார்டு, உறுப்பினர், 16 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 31 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 122 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 171 ஊரக உள்ளாட்சி பதவி இடங்களுக்கும், ஒரு மாநகராட்சி வார்டு உறுப்பினர், ஒரு நகராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் 7 பேரூராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 180 உள்ளாட்சி அமைப்பு பதவி இடங்களுக்கும் 9-ந்தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

முடிவுகள் அறிவிப்பு

131 மையங்களில் வாக்கு எண்ணிக்கை 12-ந்தேதி அன்று காலை 8 மணி முதல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வருமாறு:- மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான 2 இடங்களையும் தி.மு.க. கைப்பற்றி உள்ளது. 20 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்தில் தி.மு.க. 14 இடங்களிலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

2 மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், ஒரு நகராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்தையும் தி.மு.க. கைப்பற்றியது. 7 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்தில் 6 இடங்களை தி.மு.க.வும், ஒரு இடத்தை சுயேச்சையும் கைப்பற்றியது.ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் http://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துவிட்டதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Next Story