போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
நாட்டறம்பள்ளியை அடுத்த ஜங்களாபுரம் அடுத்த சின்ன பூசாரியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் பூக் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் கீர்த்திவாசன் (வயது 25) இவரும், ஏழரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த திவ்யா (25) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கீர்த்தி வாசனும், திவ்யாவும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று சூளகிரி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், திருமணம் செய்து கொண்ட இருவரும் பாதுகாப்பு கேட்டு நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இது சம்பந்தமாக இருவரின் பெற்றோரையும் போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டனர் என தெரிவித்து, காதலன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.